மொபைல் போன் பார்ப்பதை கண்டித்ததால் மாணவர் தற்கொலை
மொபைல் போன் பார்ப்பதை கண்டித்ததால் மாணவர் தற்கொலை
ADDED : ஏப் 27, 2026 09:44 PM

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே மொபைல் போன் பார்ப்பதை பெரியப்பா கண்டித்தால், கல்லுாரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ஏ.பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் புஷ்பராஜ், 17; இவர், கப்பியாம்புலியூரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார்.
தாய் இறந்த ஆதரவற்ற நிலையில், பனப்பாக்கத்தில் உள்ள அவரது பெரியம்மா குப்பம்மாள் வீட்டில் வசித்து வந்தார்.
கல்லுாரிக்குச் செல்லும் புஷ்பராஜ் வீட்டிலிருந்தபோது, அடிக்கடி மொபைல் போன் பார்த்தபடி இருந்துள்ளார்.
கடந்த 22ம் தேதி வீட்டில் மொபைல் போன் பார்த்த புஷ்பராஜை, ஆறுமுகம் கண்டித்தார். இதனால், விரக்தியடைந்த புஷ்பராஜ் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து தேடி வந்த நிலையில், நேற்று மதியம், விக்கிரவாண்டி வராகநதியோரம் வாலிபர் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு அழுகிய நிலையில் புஷ்பராஜ் உடல் கிடந்தது.
விசாரணையில் பெரியப்பா திட்டியதால், பூச்சி மருந்து குடித்து அவர் இறந்து கிடந்தது தெரிந்தது. விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
