/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர்' நாளிதழ் நடத்திய 'நீட்' மாதிரி தேர்வு விழுப்புரத்தில் குவிந்த மாணவ, மாணவிகள்
/
'தினமலர்' நாளிதழ் நடத்திய 'நீட்' மாதிரி தேர்வு விழுப்புரத்தில் குவிந்த மாணவ, மாணவிகள்
'தினமலர்' நாளிதழ் நடத்திய 'நீட்' மாதிரி தேர்வு விழுப்புரத்தில் குவிந்த மாணவ, மாணவிகள்
'தினமலர்' நாளிதழ் நடத்திய 'நீட்' மாதிரி தேர்வு விழுப்புரத்தில் குவிந்த மாணவ, மாணவிகள்
ADDED : ஏப் 28, 2025 04:43 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தினமலர் நாளிதழ், சரஸ்வதி சென்ட்ரல் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து நடத்திய நீட் மாதிரி நுழைவு தேர்வை மாணவ, மாணவிகள் ஆர்வமாக எழுதினர்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நாடு முழுதும் வரும் மே மாதம் 4ம் தேதி நடக்கிறது. நீட் தேர்வினை பயம் இன்றி எதிர்கொள்ளும் வகையில், 'தினமலர்' நாளிதழ், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை வி.பாளையம் சரஸ்வதி சென்ட்ரல் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வு, நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, அப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
இதில் பங்கேற்க ஏற்கனவே வாட்ஸ் ஆப்பில் முன்பதிவு செய்திருந்த மாணவர்கள், பெற்றோருடன் காலை 8:00 மணி முதல் தேர்வு மையத்தில் குவியத் துவங்கினர். மாணவர்களின் பதிவு எண் சோதிக்கப்பட்டு காலை 9:25 மணி முதல் 9:45 மணி வரை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நீட் கட்டுப்பாடுகள்
இது மாதிரி தேர்வு என்றாலும், உண்மையான நீட் தேர்வு போன்றே நடத்தப்பட்டது. தேர்வு மையத்தில் தேர்வுக்கு வந்த மாணவர்கள் தீவிர சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டனர்.
பெற்றோர் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. மாணவர்கள் முழுக்கை சட்டை அணியவும், மொபைல் போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு பொருட்கள், பை, பர்ஸ் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
காலை 10:00 மணிக்கு வினாத்தாள், ஓ.எம்.ஆர்., தாள் வினியோகிக்கப்பட்டு தேர்வு துவங்கியது. தேர்வில் நீட் தேர்வு போன்றே, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து மொத்தம் 720 மதிப்பெண்ணிற்கு 180 கேள்விகள் இடம்பெற்றன.
வினாத்தாள்களை பெற்றதும் உற்சாகமடைந்த மாணவ, மாணவிகள் பால் பயிண்ட் பேனாவினால் விடைகளை ஓ.எம்.ஆர்., தாளில் வட்டமிட்டனர். விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்ற இந்த மாதிரி தேர்வு மதியம் 1:00 மணியளவில் நிறைவடைந்தது. மொத்தம் 300 மாணவர்கள் பங்கேற்றனர்.
பெற்றோர் ஆர்வம்
தேர்வு எழுதிய பிறகு கேள்வித்தாள்களுடன் வெளியே வந்த மாணவர்களை பெற்றோர்கள் முக மலர்ச்சியுடன் வரவேற்றனர். அத்துடன் தேர்வு குறித்து கேள்விகணையையும் வீசினர். நீட் கேள்விகள் எப்படி இருந்தன. எந்த பாடத்தில் கேள்விகள் கடினமான இருந்தது என கேள்வித்தாள்களை வைத்துக்கொண்டு எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என, கணக்குபோட்டு பார்த்தனர்.
அதன் பிறகு ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இது மாதிரி தேர்வு தான். இது போன்று தான் உண்மையான தேசிய தேர்வு முகமையின் நீட் தேர்வும் நடக்கும். எனவே தைரியமாக எதிர் கொண்டு எழுதிவிடலாம் என, உற்சாகப்படுத்தி, அழைத்துச் சென்றனர்.
'வாட்ஸ் ஆப்'பில் ரிசல்ட்
மாதிரி நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் மொபைல் எண்கள் வாட்ஸ் ஆப் குழுவில் இணைக்கப்பட்டு நேற்று மாலையே ரிசல்ட் வெளியிடப்பட்டது. இயற்பியல், வேதியியல், உயிரியலில் மாணவ, மாணவிகள் எடுத்த மதிப்பெண், அவர்களின் ரேங்க்குடன் வெளியிடப்பட்டன. சரியான விடைக்கு 4 மதிப்பெண்களும், தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண்ணும் அளிக்கப்பட்டது.
சிறந்த அனுபவம்
நீட் தேர்வுக்காக பல்வேறு கோச்சிங் சென்டர்களில் மாணவ, மாணவிகள் படித்து, மாதிரி தேர்வு எழுதி வருகின்றனர். ஆன் லைனிலும் நீட் மாதிரி தேர்வினை எழுதுகின்றனர். ஆனால், தேசிய தேர்வு முகமை நடத்தும் உண்மையான நீட் தேர்வு போன்று நேற்று நடந்த 'தினமலர்' மாதிரி நீட் தேர்வு, மாணவர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது.
இதுவரை கோச்சிங் சென்டர்களில் தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன் குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே மாதிரி தேர்வு எழுதி வந்த மாணவ, மாணவியர்கள் நேற்று மாவட்ட அளவில் பிற மாணவர்களுடன் போட்டி போட்டு உண்மையான நீட் தேர்வு எழுதும் அனுபவத்தை பெற்றனர்.
நம்பிக்கை பிறந்தது
மருத்துவராகும் கனவுடன் தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒரு நல்ல நேர்மறையான வழிகாட்டியாக 'தினமலர் நீட்' மாதிரி தேர்வு அமைந்தது. அத்துடன் தேர்வு எழுதிய மாணவர்களின் மனதில் அவர்களால் முடியும் என்ற தன்னம்பிக்கையயும் இந்த மாதிரி நீட் தேர்வு ஏற்படுத்தியது.
'தினமலர்' மாதிரி தேர்வினால், நீட் தேர்வு குறித்த பயம் நீங்கி, உண்மையான புரிதல் ஏற்பட்டது. வரும் மே மாதம் 4ம் தேதி நடக்கும் நாடு தழுவிய நீட் தேர்வினை தைரியமாக எதிர்கொண்டு எழுதுவேன் என, உறுதி பூண்ட மாணவ, மாணவியர்கள் தன்னம்பிக்கையுடன் விடை பெற்றனர்.