/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்
/
பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்
ADDED : ஆக 12, 2025 11:23 PM

விழுப்புரம் : அரசு பஸ்களின் படியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்வதை தடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள், அருகில் உள்ள விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் போன்ற நகரப்பகுதி பள்ளி, கல்லுாரிகளில் படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து தினந்தோறும் அரசு பஸ்களில் நகரப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றது.
பல கிராமங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு அரசு பஸ்கள் தான் இயக்கப்படுகின்றது.
இதனால், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும்போதும், வீட்டிற்கு வரும்போதும் மாணவர்கள் அரசு பஸ்களில் முண்டியடித்து ஏறி, படியில் தொங்கி ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
அரசு பஸ்சில் கூட்ட நெரிசலில் படியில் தொங்கும் மாணவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. அதனால், மாணவர்கள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுவதை தடுக்க பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.