/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திறமைமிக்க ஆசிரியர்களால் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக பாடம் கற்பிப்பு சென்னகுணம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் மாணவர்கள்
/
திறமைமிக்க ஆசிரியர்களால் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக பாடம் கற்பிப்பு சென்னகுணம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் மாணவர்கள்
திறமைமிக்க ஆசிரியர்களால் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக பாடம் கற்பிப்பு சென்னகுணம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் மாணவர்கள்
திறமைமிக்க ஆசிரியர்களால் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக பாடம் கற்பிப்பு சென்னகுணம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் மாணவர்கள்
UPDATED : டிச 07, 2025 05:09 AM
ADDED : டிச 07, 2025 05:00 AM

வி ழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த முகையூர் ஒன்றியத்தில் உள்ள சென்னகுணம் அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த 1927ம் ஆண்டு துவங்கப்பட்டது. 1961 ஏப்ரல் 1ம் தேதி நடுநிலைப் பள்ளியாகவும், 2010ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.இப்பள்ளியில் சென்னகுணம் மட்டுமின்றி அருகிலப் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 261 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆங்கில வழி கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது.
தலைமை ஆசிரியர் அருணகிரி மற்றும் 9 ஆசிரியர்கள், ஒரு அலுவலக பணியாளர், 3 பகுதி நேர ஆசிரியர்கள், ஒரு ஆய்வக உதவியாளர் பணியாற்றி வருகின்றனர்.
இப் பள்ளி பொதுத் தேர்வில், கடந்த 2010-2011; 2020-2021; ஆண்டுகளில் 95 சதவீத்திற்கு மேலும், 2024 - 2025ம் ஆண்டு 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கணினி ஆய்வகம், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, அறிவியல் ஆய்வகம் என மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.
மாணவர்களின் அறிவு வேட்கையை தணிக்க பள்ளியில் நுாலகம், அறிவியல் ஆய்வுக்கூடம், உயர்தர கணினி ஆய்வகம் போன்ற வசதிகள் உள்ளது.
இப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதோடு ஒழுக்கம், மனிதநேயம், நாட்டுப்பற்று, பொது சேவை தொண்டு விழிப்புணர்வு, பொது அறிவு போன்றவைகளும் கற்பிக்கப்படுகிறது.
மேலும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சி, யோகா பயிற்சி, தற்காப்பு கலைகள் என பல்வேறு கலைகளில் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
கடந்த 2018-2019ம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த கோபிநாத் என்ற மாணவருக்கு காமராஜர் விருது மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் தமிழக முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி போட்டியில் இப்பள்ளி மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாமிடமும் பெற்று 15 ஆயிரம் ரூபாயை மாணவி ரேணுகா பெற்றுள்ளார்.
இளம் செஞ்சிலுவை சங்கம் மூலம் கோவையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் முதல் இரண்டு இடங்களை மாணவிகள் ஜெயச்சித்ரா, சங்கரி ஆகியோர் பெற்றுள்ளனர். கலைத் திருவிழாவில் விவாத மேடையில் மாணவி ரோணு குழுவினர் மாவட்டத்தில் முதல் இடமும் மாநில அளவிலும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளித் தலைமையாசிரியர் அருணகிரிக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதும் பாராட்டு சான்றும், கேடயமும் பள்ளி வளர்ச்சிக்காக 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது.
அதை நமக்கு நாமே திட்டத்தின் மூலம் , மாவட்ட ஆட்சியருக்கு செலுத்தி 20 லட்சம் ரூபாயாக பெருக்கி பள்ளிக்கு சுற்றுச்சுவர் சுவர் கட்ட ஏற்பாடு செய்துள்ளார்.
கல்வியையும், ஒழுக்கத்தையும் இரு கண்களாக பாவித்து திறமைமிக்க ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கப்படுவதால் இப்பள்ளி மாணவ, மாணவியர்களின் சாதனை பள்ளியாக திகழ்கிறது.
வாழ்க்கை நெறிமுறைகள்
கற்றுத் தரப்படுகிறது
சென்னகுணம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியுடன் வாழ்க்கை நெறிமுறைகளை பக்குவமாய் வழங்கி வருகிறது. இதனால், மாணவர்கள் புடம் போட்ட தங்கம் போல சமூகத்தில் உயர்ந்து நிற்க வழி வகை செய்கிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அடிக்கடி குறுந்தேர்வுகள் நடத்தப்படுவதால் மிக எளிதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முழு வெற்றியை பெற முடிகிறது. இந்த மாணவ, மாணவர்களை நன்கு படித்து எதிர்காலத்தில் நல்லதொரு பணியில் சேர்ந்து வாழ்வில் வளம்பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். -சண்முகம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். சென்னகுணம்.
ஏழை, எளிய மாணவர்களுக்கு
இப்பள்ளி அறிவுக்கூடம்
இப்பள்ளி கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு அறிவுக் கூடமாக திகழ்கிறது. தனியார் பள்ளிக்கு இணையாக இங்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் பாவேந்தர் பேரவை செயலாளர் உலகத்துறை, இந்திய இலக்கிய அமைப்பு, காப்பிய அரங்கம், பாரதி இலக்கிய மன்றம், கலைஞர் தமிழ்க் கூடல் கழகம் இவற்றின் மூலம் இலக்கிய அறிவை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கு பெரும் மாணவர்களுக்கு இங்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணிபுரிவதால் திறமை மிக்க மாணவர்களை உருவாக்குகின்றனர். -சிவா, ஒன்றிய கவுன்சிலர், முகையூர்.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன்
பள்ளி வளர்ச்சிக்கு பாடுபடுகிறோம்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் சேகர், பள்ளித் துணை ஆய்வாளர் வீரமணி ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் இப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த சென்னகுணம் ஊராட்சி சார்பில் 2 லட்சம் ரூபாய் அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கஸ்துாரிபாய் சுய உதவி குழு மூலம் தலைவி கற்பகம் ராஜேந்திரன் 50 ஆயிரம் ரூபாய் பள்ளி வளர்ச்சிக்காகவும் ஆண்டு விழா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதற்காகவும வழங்கியுள்ளார். சென்னகுணம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ராஜேந்திரன், சூரியேந்தன் பள்ளிக்கு கல்வி சீராக 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தொலைக் காட்சி வழங்கியுள்ளனர். சென்னை பார்சுவனாத் செராமெண்டல் அமைப்பு மூலம் அனைத்து மாணவ மாணவியர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. திறமை மிக்க ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்போடு இப்பள்ளியின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒற்றுமையுடன் அர்ப்பணிப்போடு பாடுபட்டு வருகிறோம். -அருணகிரி, தலைமையாசிரியர், நல்லாசிரியர் விருது பெற்றவர், அரசு உயர்நிலைப் பள்ளி, சென்னகுணம்.
இலக்கிய மன்ற செயல்பாடு
சிறப்பாக உள்ளது
சென்னகுணம் அரசு உயர்நிலைப் பள்ளி கல்வி, கலை, இலக்கியப் பணிகளில் ஒரு மைல் கல்லாக உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் நல்ல கலைத்திறனும் கவி, உரை, படைப்பு ஊக்கத்துடனும் இருக்கின்றனர். மாவட்ட, மாநில அளவில் நடக்கும் போட்டிகளுக்கு மாணவ மாணவியரை ஒருகிணைத்து கொண்டு செல்வதில் இலக்கிய மன்ற செயல்பாடு சிறப்பாக உள்ளது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு கண்ணன் அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. -நாகராஜன், நல்லாசிரியர், தே.நி.பட்டதாரி தமிழாசிரியர்.
இப்பள்ளி மாணவர்கள்
பல்வேறு துறைகளில் சாதனை
முகையூர் ஒன்றியத்தில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கடந்த 1916ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பள்ளிகளில் ஒன்று சென்னகுணம் அரசுப் பள்ளியாகும். இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் தற்போது பேராசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மருத்துவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளிக்கு பலர் தங்கள் நிலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். அவர்களின் நல்ல உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். -கலியன், ஓய்வு பெற்ற ஆசிரியர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, விழுப்புரம் மாவட்ட தலைவர்.
காகிதங்களை
ஆயுதமாக்குபவர்கள்
அரசு பள்ளி மாணவர்கள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார். இப்பள்ளி ஆசிரியர்கள் முழு அர்ப்பணி மனப்பான்மையுடன் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கின்றனர். காகிதங்களை ஆயுதங்களாக மாற்றும் கல்விப் பணியை அரசு பள்ளியில் சிறப்பாக செய்து வரலாறு படைக்கின்றனர். அந்தோணி ராஜ், தேர்வு நிலை பட்டதாரி ஆசிரியர் சமூக அறிவியல்.
குன்றின் மேலிட்ட விளக்காக
சென்னகுணம் பள்ளி
இப்பள்ளி, சிறப்பாக கல்வி புகட்டும் பள்ளியாக உள்ளது. இங்கு நல்ல பல திறமை வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் மாணவர்கள் நன்றாக கல்வியை கற்பார்கள். குன்றின் மேலிட்ட விளக்காக ஒளிவீசிக் கொண்டிருக்கிறது இப்பள்ளி. கல்வியறிவோடு, நல்லொழுக்கத்தையும் சேவை மனப்பான்மையையும் மாணவர்களின் இதய வயல்களில் கல்வி எனும் விதைகளைத் துாவி சமுதாயத்தை நந்தவனமாக மாற்றும் ஆசிரியர்கள் இப்பள்ளியில் உள்ளவரை பல நுாறு ஆண்டுகளானலும் பள்ளியின் பெருமை பறைசாற்றும். -மகாலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சென்னகுணம்.
மாணவர்களின் ஆளுமை
திறனை வளர்கிறது
இப்பள்ளி கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் முழு அக்கறைடன் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் இடையே முழு ஆளுமைத் திறனை வளர்த்து அவர்களிடையே பெண் கல்வி, பெண் உரிமை, பெண் பாதுகாப்பு போன்றவற்றை சிறப்புடன் செய்வதால் இவற்றை பாராட்டி எங்களுடைய கஸ்தூரிபாய் சுய உதவி குழு மூலம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளேன். மாணவர்கள் கலை இலக்கியப் போட்டிகள் அறிவியல் கண்காட்சி போன்றவற்றை சிறப்புடன் செய்து வருகின்றனர். -கற்பகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கஸ்துாரிபாய் சுய உதவிக் குழு தலைவர். சென்னகுணம்.
கல்வித்துறை அதிகாரிகளால்
வழிகாட்டுதலால் முழு தேர்ச்சி
சென்னகுணம் அரசு உயர்நிலைப் பள்ளி ஏழை, எளிய மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் பண்பாடாய் கற்பிக்கும் இனிமை பள்ளியாக திகழ்கிறது. விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகனின் ஊக்கமும், ஆக்கமும் பொதுத்தேர்வில், மாணவர்களின் முழு தேர்ச்சிக்கு வித்திட்டு வருகிறது. மாவட்ட கல்வி அலுவலர் சேகர், துணை பள்ளி ஆய்வாளர் வீரமணி ஆகியோர் வழிகாட்டுதலுடன் இப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருவது இந்த ஊருக்கு பெருமையாக உள்ளது. -தேவி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்.
மாணவர்களுக்கு அறிவு
கண்ணை திறக்கும் பள்ளி
சென்னகுணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி என்னும் விதை விதைத்து அதன் பாங்குடனே வளர்த்து பலரின் அறிவுக் கண்ணைத் திறந்து வெற்றி முகமாய், இப் பள்ளி பயணிக்கிறது என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இப்பள்ளி மாணவர்கள் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர் என்றால் அது மிகையாகாது. இப்பள்ளி ஆசிரியர்கள் முழு அர்ப்பணிப்புடன் திறமை மிக்க மாணவர்களை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக அவர்கள் ஒழுக்கம், பண்பாடு, சீரிய சிந்தனைகளை பெற்று வாழ்வில் உயர் நிலையை அடைந்து வருகின்றனர். -சிவானந்தம், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர், அரசு உயர்நிலைப்பள்ளி, சென்னகுணம்.
மேல்நிலைப் பள்ளியாக
அரசு தரம் உயரத்த வேண்டும்
பள்ளி மனிதனை மாண்புறச் செய்யும் அறிவின் விளக்கமே வாழ்வின் விளக்கம். பொருட்செல்வத்தை காட்டிலும் கல்விச்செல்வமே மேலானது. வகுப்பறையில்தான் வருங்கால இந்தியாவை வடிக்கும் சிற்பிகள் நிர்ணக்கப்படுகிறார்கள். வைரங்கள் பட்டை தீட்டப்படும் பட்டறையாக பள்ளியும், பட்டை தீட்டுபவர்களாக ஆசிரியர்களும் உள்ளனர். அந்த வகையில் சிறப்பாக இயங்கும் சென்னகுணம் அரசு உயர்நிலைப்பள்ளி செம்மையுற வாழ்த்துகிறேன். விரைவில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமேஸ்வரன், ஊராட்சி தலைவர், சென்னகுணம்.
சிறப்பான கல்விப்பணியில்
தலைமையாசிரியர், ஆசிரியர்கள்
இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேசிய விழாக்களை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகளவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்குகின்றனர். மேலும் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மேலாண்மைக் குழு சார்பில் சிறப்பான கல்விப் பணி கல்வி பணியை மேற்கொண்டு வருவதால் மாணவர்கள் நல்லொழுக்கம் மிக்கவர்களாக உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்கும் பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக இவ்வூருக்கு பெருமை சேர்த்து வருகிறது. -சித்தார்த்தன், ஊராட்சி துணைத் தலைவர். சென்னகுணம்.

