ADDED : ஜன 31, 2026 06:11 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டு பகுதிகளில் நடந்து வரும் தார் சாலை பணிகளை எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் நகராட்சியில், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில், 17 வார்டுகளுக்குட்பட்ட இடங்களில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக, சாலைகளில் பள்ளம் தோண்டி கட்டமைப்பு பணிகள் நடந்தன.
அந்த பகுதிகளில், புதிதாக தார் சாலை போடும் பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், காகுப்பம், எருமனந்தாங்கல், கிழக்கு பாண்டிரோடு ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில், சாலை பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை லட்சுமணன் எம்.எல்.ஏ., நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சாலையின் தரம் குறித்தும், சாலை வசதிகள் தேவைப்படும் பகுதிகள் குறித்தும், நகராட்சி அதிகாரிகளுடன் கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார்.
காகுப்பம் பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்திற்கு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், அங்கு சாலை போடாமல் ஜல்லிகள் மட்டுமே கொட்டப்பட்டிருந்ததை பார்வையிட்ட அவர், இப்பகுதியில் தைப்பூச திருவிழா நடைபெறுவதால், உடனே சாலை அமைக்கும்படி, நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அங்கிருந்த பொது மக்களிடம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவை குறித்து கேட்டறிந்த அவர், உடனே நிறைவேற்றி தருவதாகவும் உறுதியளித்தார்.
ஆய்வின்போது, நகராட்சி கமிஷனர் வசந்தி, பொறியாளர் புவனேஸ்வரி, தி.மு.க., நகர பொறுப்பாளர் வெற்றிவேல், கவுன்சிலர்கள் மணவாளன், நந்தா நெடுஞ்செழியன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
