/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
2.74 லட்சம் மரக்கன்று நடுவதற்கு இலக்கு: பணிகளை துவக்கிய வனத்துறை
/
2.74 லட்சம் மரக்கன்று நடுவதற்கு இலக்கு: பணிகளை துவக்கிய வனத்துறை
2.74 லட்சம் மரக்கன்று நடுவதற்கு இலக்கு: பணிகளை துவக்கிய வனத்துறை
2.74 லட்சம் மரக்கன்று நடுவதற்கு இலக்கு: பணிகளை துவக்கிய வனத்துறை
ADDED : ஏப் 24, 2025 05:32 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இந்தாண்டு 2.74 லட்சம் மரக்கன்று நடுவதற்கு, வனத்துறை இலக்கு நிர்ணயித்து, நர்சரி அமைக்கும் பணியை துவங்கி உள்ளது.
விழுப்புரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 61,469.64 ஏக்கர் வனம் பராமரிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், திண்டிவனம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, செஞ்சி, கள்ளக்குறிச்சி, கோமுகி, வெள்ளிமலை, சேராப்பட்டு, பாலப்பட்டு பகுதிகளில் உள்ள வனச்சரக அலுவலகம் கண்காணிப்பில் உள்ளது.
சாலைகள், குடியிருப்புகள், வீதிகள், பொதுவெளிகளை பசுமையாக்கும் வகையில் மரக்கன்றுகளை வைப்பதற்கு வனத்துறை மூலம் அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது. பொதுமக்களுக்கு தருவதற்காக தேக்கு, மா, ரோஸ்வுட், பூங்கான், வேம்பு மர கன்றுகளும், காடுகளில் வளர்க்க அத்தி, கொடுக்காபுலி, நிலங்களில் சவுக்கு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் கடந்தாண்டு பசுமை தமிழகம் திட்டம் மூலம் 60 ஆயிரம் மரக்கன்றுகளும், தமிழ்நாடு பல்லுாயிர் மற்றும் பசுமையாக்கல் திட்டத்தில் 2,79,534 மரக்கன்றுகள், தேசிய நெடுஞ்சாலை நிதியின் கீழ் 10,000 கன்றுகளும், ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா மூலம் 25 ஆயிரம் மரக்கன்றுகள், நிலங்களில் 40 ஆயிரம் கன்று, பசுமை குழு மூலம் ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலை துறை இணைந்து 12,500 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 2500 மரக்கன்றுகள் கூடுதலாக நடப்பட்டன. இதற்காக, ரூ. 97 லட்சம் செலவிட்டனர்.
வனத்துறையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டதால், இந்தாண்டு, விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும், பசுமை தமிழகம் திட்டத்தில் 20 ஆயிரம் கன்றுகள், பல்லுாயிர் திட்டத்தில் 1,94,000 கன்றுகள், சிப்காட்டில் 30 ஆயிரம், நிலங்களில் 20 ஆயிரம் கன்று, பசுமை குழுக்கள் மூலம் ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து 10 ஆயிரம் மரக்கன்று என மொத்தம் 2.74 லட்சம் மரக்கன்று நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்; இந்த ஆண்டு இலக்கை எட்டுவதற்கு, சிப்காட் உள்ளிட்ட பல இடங்களில் நர்சரி அமைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் வரை இந்த மரக்கன்றுகள் அனைத்தும் நடப்பட்டு இலக்கு நிறைவேற்றப்படும் என கூறினர்.

