/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் படித்த 153 ஆண்டு பழமையான திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளி
/
காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் படித்த 153 ஆண்டு பழமையான திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளி
காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் படித்த 153 ஆண்டு பழமையான திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளி
காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் படித்த 153 ஆண்டு பழமையான திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளி
UPDATED : ஆக 03, 2025 09:37 AM
ADDED : ஆக 02, 2025 11:20 PM

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில், பழமை வாய்ந்த பள்ளியில் முதல் வரிசையில் இருப்பது, திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளி கடந்த, 1872ம் ஆண்டு துவக்கப்பட்டு, தற்போது 153 ஆண்டுகள் ஆகிறது.
திண்டிவனத்தில் உள்ள பள்ளிகளில் ஆங்கிலேயர் காலத்தில் திண்டிவனத்தை சுற்றியுள்ள 25 மைல்களுக்குள் பள்ளிகள் இல்லை என்பதால், திண்டிவனத்தில் துவங்கப்பட்ட இந்த பள்ளியில் ஏராளமானோர் படித்துள்ளனர்.
இப்பள்ளியை ஜெ.எச்.வொயிக் கார்ப் துவக்கியதால், அவரது பெயரிலேயே தொடக்கப் பள்ளியாக செயல்பட்டு வந்தது. அதன் பின் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது.
தொடர்ந்து கடந்த, 1903ம் ஆண்டில், இந்த பள்ளி மிஷன் ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியாக மாறியது. பள்ளியை நிர்வாகம் செய்வது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, நிதி பற்றாக்குறை என பல சிக்கல்கள் வந்ததால், திண்டிவனத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ஒன்றிணைந்து, மிஷினரி இயக்கமான அமெரிக்கன் ஆர்காட் மிஷனரியை (ஏ.ஏ.ம்.) சந்தித்தனர்.
அந்த சமயத்தில் முக்கியமான பொறுப்பாளராக இருந்து வந்த ரெவரன்ட் டாக்டர் வால்டர் ட்ரூஸ் ஸ்கடரை சந்தித்து, பள்ளியை மேற்கொண்டு செயல்பட உதவிடுமாறு கோரிக்கை வைத்தனர்.
மேல்நிலைப் பள்ளியானது அதன்பிறகு கடந்த, 1903ம் ஆண்டு, உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. கடந்த 1924ம் ஆண்டு பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு பிறகு, அமெரிக்கன் ஆர்காட் மிஷன் பள்ளி என பெயர் வைக்கப்பட்டது. கடந்த, 1959ம் ஆண்டு ரெவரன்ட் டாக்டர் வால்டர் ட்ரூஸ் ஸ்கடர் நினைவாக வால்டர் ஸ்கடர் உயர்நிலைப் பள்ளியாக பெயர் மாற்றப்பட்டது.
தொடர்ந்து கடந்த, 1978ம் ஆண்டு வேலுார் பேராயர் ரெவரன்ட் சாம் பொன்னையா என்பவரால் மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
கடந்த கடந்த 2002ம் ஆண்டில் சாமுவேல் அகஸ்டின், தாளாளர் ஜெயகரன் ஐசக் ஆகியோரது முயற்சியால் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன.
தற்போது இந்த பள்ளி வேலுார் சி.எஸ்.ஐ., பேராயத்தின் பேராயர் மற்றும் பேராய அனைத்து பள்ளிகளின் கூட்டாண்மை நிர்வாகி ரெவரன்ட் எச்.சர்மா நித்தியானந்தம் தலைமையில் கீழ், வால்டர் ஸ்கடர் பள்ளியின் தாளாளர் செல்லதுரை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாக குழு துணையுடன் சிறப்புாக செயல்பட்டு வருகிறது.
திண்டிவனத்தில் பழமை வாய்ந்த இப்பள்ளியில் தற்போது 800 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி அரசின் நிதியுதவி பெற்றும் பள்ளியாக இருப்பதால், மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் தடையில்லாமல் வழங்கப்படுகிறது.
இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் பல்வேறு சாதனைகளை படைத்து, இந்திய அளவில் சிறந்து விளங்கினர்.
சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஓ.பி.ஆர்., படித்த பள்ளி இந்த பள்ளியில் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் படித்துள்ளது, பள்ளிக்கு கூடுதல் பெருமையை சேர்த்துள்ளது.
இதேபோல் இந்த பள்ளியில் சென்னை மாகாண முதல்வராக இருந்த ஓ.பி.ஆர்., என அழைக்கப்படும் ஓ.பி.ராமசாமி ரெட்டியார், தலைமை நீதிபதியாக இருந்த ஜனாப் பஷீர் அகமது, தற்போதுள்ள ஐகோர்ட் நீதிபதி பரத சக்கரவர்த்தி போன்றோர் இந்த பள்ளியில் படித்துள்ளனர்.
மேலும், திண்டினத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கட்ராமன், தற்போது அ.தி.மு.க., எம்.பியாக உள்ள சண்முகம். மறைந்த திரைப்பட நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு, திண்டிவனம் முன்னாள் எம்.எல்.ஏ., சீத்தாபதி சொக்கலிங்கம் என பலர் உயர் பதவிகளை வகித்து, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பள்ளியைச் சேர்ந்த ஜேம்ஸ் செல்வநாதன், சஸ்வதானந்தா, விக்டர் பாக்கியநாதன் ஆகியோர் மாநில அரசின் நல்லாசிரியர் விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளிக்க, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சண்முகம், தன்னுடைய எம்.பி., நிதி மூலம் 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, பள்ளியின் சுற்றுச்சுவர் எழுப்புவதற்கும், பள்ளியில் மாணவர்கள் விளையாடுவதற்காக ஓடுதளம் அமைத்து கொடுத்து, பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.
பள்ளி மாணவர்களின் திறனை அதிகரிக்கும் வகையில், அடல் டிங்க்கரிங் லேப் உள்ளது. இந்த லேப் மூலம் ரோபிட்டிக், ஏ.ஐ.,தொழில்நுட்பம் உள்ளிட்டவைகள் கற்றுத்தரப்படுகிறது.
இயற்பியல் முதுகலை ஆசிரியை தெப்போராள் ஐரின் முயற்சியால், புனோவில் உள்ள ரேடியோ தொலை நோக்கு மையத்திற்கு பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் நான்கு பேர் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று, இந்திய அளவில் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கல்வியுடன் ஒழுக்கத்தையும்
போதிக்கும் ஆசிரியர்கள்
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது திண்டிவனத்தில் துவங்கப்பட்ட பழமை வாய்ந்த வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளி 153 ஆண்டுகள் ஆகிறது. திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற மக்களின் கல்விக் கண்ணை திறந்து, வாழ்க்கையில் சிறந்து விளங்க இப்பள்ளி உறுதுணையாக இருந்துள்ளது. மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தையும் போதிப்பதில், பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் உயர்ந்த நிலையை எட்டுவதற்கு இந்த பள்ளி அடித்தளாக இருந்துள்ளது. பள்ளி நகர மக்களின் நன்மதிப்பை பெற்று மேலும் சிறந்து விளங்கும். - ரெவரன்ட் எச்.சர்மா நித்தியானந்தம், சி.எஸ்.ஐ., பேராய பேராயர், வேலுார்.
பள்ளியின் முன்னாள் மாணவர்
என்பதில் பெருமை
இந்த பள்ளியில் படித்தவர்கள் பலர் இந்திய அளவில் நல்ல நிலையில் உயர்ந்து பெயர் பெற்றுள்ளனர். பள்ளியில் படித்த மாணவர் ஒருவர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவியில் இருந்துள்ளார். இதே போல் சென்னை மாகாண முதல்வர் ஓ.பி.,ஆர்., மற்றும் காஞ்சி மடத்தின் பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பள்ளியில் படித்துள்ளார். இதனால் சுவாமிகள் இந்த பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளார். நகரில் உள்ள ஏழை, நடுத்த மக்களுக்கு கல்வி போதித்து சாதனை படைக்க உதவிய வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர் என்ற அடிப்படையில் நானும் பெருமை கொள்கிறேன். -பாபு, 13வது வார்டு கவுன்சிலர்.
திண்டிவனத்திற்கு பெருமை சேர்த்தவர்
சந்திரசேகரேந்திர சுரஸ்வதி சுவாமிகள்
153 ஆண்டு பழமை வாய்ந்த இப்பள்ளியில் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் படித்துள்ளது, நகர மக்களுக்கு பெருமையை சேர்ந்துள்ளது. அவர் படித்த வகுப்பறை இன்றளவும் அப்படியே உள்ளது. அவர் படித்த வகுப்பறை இடிந்து விழும் நிலையில் இருந்ததால் கட்டடத்தை மட்டும் இடித்து விட்டு, அந்த இடத்தில் புதிய வகுப்பறை கட்டாமல் அப்படியே வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மடத்திலிருந்து வரும் பக்தர்களுக்கு சுவாமிகள் படித்த இடத்தை காண்பிப்பேன். பக்தர்கள் அங்கு அமர்ந்து தியானம் செய்துவிட்டு செல்வார்கள். -நாகராஜ் ஐயர், திண்டிவனம்.