/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'செஞ்சியில் குடிநீர் திட்ட பணி ஜூன் மாதம் முடியும்' பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தகவல்
/
'செஞ்சியில் குடிநீர் திட்ட பணி ஜூன் மாதம் முடியும்' பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தகவல்
'செஞ்சியில் குடிநீர் திட்ட பணி ஜூன் மாதம் முடியும்' பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தகவல்
'செஞ்சியில் குடிநீர் திட்ட பணி ஜூன் மாதம் முடியும்' பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தகவல்
ADDED : பிப் 29, 2024 11:46 PM

செஞ்சி: செஞ்சி பேரூராட்சியில் 33 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் புதிய குடிநீர் திட்ட பணிகள் ஜூன் மாதம் முடிவடையும் என, பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தெரிவித்தார்.
செஞ்சி பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 33 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 18 வார்டுகளிலும் உள்ள தெருக்களில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் எடுத்து குழாய் பதித்து வருகின்றனர்.
இப்பணிகள் குறித்து பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி கூறியதாவது;
செஞ்சி பேரூராட்சியில் 33 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் ஏற்கனவே இருந்த குடிநீர் திட்டம் போதுமானதாக இல்லை.
தற்போது அம்ரூத் திட்டத்தின் கீழ் 33.38 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருக்கோவிலுார் அருகே உள்ள நெற்குணம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து வருகிறோம். இதற்கு முன்பு 48 கி.மீ., துாரமாக இருந்தது.
தற்போது மறு சீரமைப்பு செய்து புதிய வழியில் 42 கி.மீ., துாரமாக குறைக்கப்பட்டுள்ளது. 29 கி.மீ., துாரத்திற்கு எப்போதும் உடையாத டி.ஐ., வகை குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
நகர பகுதியிலும் புதிய எச்.டி.பி., வகை குழாய்கள் பதிக்கப்படுகின்றன. இந்த குழாய்களும் உடையாது. இதில் இருந்து திருட்டு தனமாக தண்ணீரை எடுக்க முடியாது.
இதனால் எதிர்காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்க முடியும். ஏற்கனவே 7 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு இருந்தது. புதிய திட்டத்தில் 10 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி இணைப்புகள் வழங்க வேண்டும் என்பதால் பணிகள் ஜூன் மாதம் இறுதி வரை நடக்கும். இதன் பிறகு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் அனைத்து தெருக்களும் புதுப்பிக்கப்படும்.
அதுவரை பொது மக்கள் சிரமம் பாராமல் பேரூராட்சி நிர்வாகித்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு மொக்தியார் அலி கூறினார்.

