/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் அவதார மகிமை
/
ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் அவதார மகிமை
ADDED : செப் 05, 2025 08:15 AM
பகவானின் முதல் அவதாரம் ஸ்ரீ ஹயக்ரீவர்..
மது, கைடபர் என்கின்ற 2 அரக்கர்களால் பிரம்மாவிடம் இருந்து திருடி ஒளித்து வைத்த வேதத்தை அந்த அரக்கர்களை ஸம்ஹரித்து வேதத்தை மீட்டு கொடுத்த அவதாரம் ஸ்ரீ ஹயக்ரீவர்.
வேதங்கள், சாஸ்திரங்கள், அறுபத்து நான்கு கலைகள் எல்லாவற்றிற்கும் ஆதாரமானவர் ஸ்ரீ ஹயக்ரீவர்.
சரஸ்வதி தேவி, தட்சணாமூர்த்தி, வியாசர், சுப்ரமணியர், விநாயகர் இவர்கள் யாவரும் ஸ்ரீ ஹயக்ரீவர் அனுக்ரஹத்தால் கல்விக்கு அதிபதி என்கிற புகழை பெற்றார்கள்.
ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பவுர்ணமி திதியில் அழகான நீண்ட தீர்க்கமான நாசியுடனும், இரண்டு பெரிய மிளிரும் காதுகளுடனும், குதிரை முகத்துடன், சூரிய ஒளி கதிர்கள் பிடரி கேசங்களாக அமைய பூமி நெற்றியாய் அமைய கங்கை, சரஸ்வதி இரு புருவங்களாகவும், சந்திர, சூரியர்கள் இரு தாமரைக் கண்களாகவும், சந்தியா தேவதைகள் நாசி துவாரங்களாகவும், பித்ரு தேவதைகள் பற்களாகவும், பிரம்ம லோகங்கள் இரு உதடுகளாகவும், காளராத்ரி கழுத்தாகவும் திவ்ய தேஜஸ்சுடன் அவதரித்தவர் ஸ்ரீ ஹயக்ரீவர்.
தங்கம் வேய்ந்த மூலஸ்தானம் கடந்த 2012ம் ஆண்டு திருப்பணியின்போது, மூலவருக்கு மூன்று நிலை ராஜகோபுரம், மூலஸ்தானம் முழுதும் மற்றும் கொடிமரம், முன் மண்டபம், இவை அனைத்தும் ஒரு கோடி ரூபாய் செலவில் தங்க முலாம் பூசப்பட்டது. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் மூலவர் தங்கம் வேய்ந்த மூலஸ்தானத்தில் ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமான் அருள்பாலிப்பது போல அருள்பாலிக்கிறார்.
உற்சவ மூர்த்திகள் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் இரண்டாவது தளத்தில் அஹோபிலத்தில் உள்ள நவ நரசிம்ம மூர்த்திகள் மற்றும் பானக நரசிம்மர் (மங்களகிரி) உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர்.
படிப்பில் தெளிவு பிறக்க திசைமாறிச் செல்லும் நம் குழந்தைகளின் மனதை மீண்டும் பாரத புண்ணிய பூமிக்கே உரிய நெறிமுறைக்கு திருப்ப வேண்டுமானால் வித்யா தேவதையான கல்விக் கடவுள் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமானை மாணவ, மாணவிகள் தினமும் பூஜித்து வரவேண்டும்.
அப்படி பூஜித்து வந்தால் மனதில் தெளிவு பிறக்கும். தீய சிந்தனைகள் அணுகாது. கிரகிப்பு மற்றும் நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். தன் வயதிற்கு சிறிதளவும் சம்மந்தமில்லாத தவறான எண்ணங்கள் நீங்கும். வாழ்க்கைக்கு மிகமிக அத்தியாவசியமான ஒழுக்கம், தன்னடக்கம், பண்பு, வாக்குவன்மை, விவேகம், தெய்வபக்தி, பெருந்தன்மை ஆகிய நற்குணங்கள் மாணவ, மாணவியரை நாடிவரும்.