வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள உத்தரவு: அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள உத்தரவு: அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
UPDATED : செப் 16, 2026 08:34 PM
ADDED : செப் 16, 2026 08:32 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
இதில், வடகிழக்கு பருவமழையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ளும் விதமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் காலத்தில் கனமழை அதிகம் உள்ள பகுதிகளில் மக்களை பாதுகாப்பான முறையில் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைப்பதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும்.
வருவாய் துறை சார்பில் வி.ஏ.ஓ.,க்கள் அனைத்து கிராமங்களிலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். கனமழை பெய்தால் உடனடியாக அப்பகுதி மக்களை சம்மந்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.
இதுமட்டுமல்லாமல், ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஊராட்சி அளவில் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கும் பட்சத்தில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகளில் மேற்கொள்ள வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவதற்கான மரம்வெட்டும் கருவிகள், பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மின்உற்பத்தி பகிர்மான கழகம் மூலம் மின் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக சரிசெய்வதற்கான மின்கம்பிகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்திருப்பதோடு, மின் பணியாளர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றில் நீர் இருப்பு குறித்த தகவல் மற்றும் நீர் வெளியேறும் அளவினை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும் நீர்வளத்துறை செயற்பொறியாளர் போதிய மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் மற்றும் காலி சாக்கு பைகள் ஆகியவற்றை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மீன்வளத்துறை உதவி இயக்குநர் புயல் ஏற்படுவதற்கு முன்னரே மீனவ கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு உடனே எச்சரிக்கை விடுக்கவும், படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் மற்றும் அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் போதிய மாத்திரை மற்றும் மருந்துகள் இருப்பு வைத்து, பேரிடரின்போது தொற்றுநோய் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு வழங்க மொபைல் பம்பு செட்டுகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
முன்னேற்பாடாக அனைத்து கிராமங்கள் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளில் போதிய தண்ணீரை இருப்பு வைக்க வேண்டும்.
கனமழையின்போது மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள தயராக இருக்க வேண்டும். மாவட்டத்தில் வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் முன்னேற்பாடு பணிகளை ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
அப்போது, டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீ ரஷத், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரியதர்ஷிணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
