வறட்சியால் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்குவதில் சிக்கல்: மாற்று ஏற்பாடு செய்ய நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை
வறட்சியால் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்குவதில் சிக்கல்: மாற்று ஏற்பாடு செய்ய நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை
UPDATED : ஆக 23, 2026 04:48 PM
ADDED : ஆக 23, 2026 04:20 PM

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சிக்கு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டிவனம் நகராட்சியில் 18 ஆயிரத்து 489 குடியிருப்புகள் உள்ளது. 83 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. 18 குளங்கள், 1.402 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிடங்கல் ஏரி உள்ளிட்ட 7 ஏரிகள் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக உள்ளது.
ஆனால் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கிப்போனது.
திண்டிவனம் பகுதி மக்களுக்கு நாள்தோறும் 75 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இதற்காக திண்டிவனம் நகராட்சிக்கு, வடவாம்பலம் கூட்டுக் குடிநீர் திட்டம், ரெட்டணை கூட்டுக் குடிநீர் திட்டம், காட்ராம்பாக்கம் குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் நகராட்சிக்கு கொண்டு வரப்படுகிறது .
பைப் லைன் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர் அனைத்தும், நகராட்சி பகுதியிலும் உள்ள ஓ.பி.ஆர்.பூங்கா, செஞ்சி ரோடு, ஜெயபுரம், வசந்தபுரம், பாரதிதாசன் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட 75 லட்சம் லிட்டர் குடிநீர், தற்போது, வறட்சி காரணமாக தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கொண்டு வரப்படுகிறது.
தண்ணீர் வரத்து மிகவும் குறைந்ததால் குடிநீர் முறையாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பொது மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது.
குடிநீர் தட்டுப்பாடு காரணமாக நகரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பணம் கொடுத்து வாட்டர் கேன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டிவனம் நகராட்சியில், கடந்த 2021ம் ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட சமயத்தில், நகராட்சி சார்பில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் டேங்கர் லாரி மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.
தற்போது மீண்டும் அதே நிலை திண்டிவனம் நகராட்சியில் ஏற்பட்டுள்ளது. நகரத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, முக்கியமான வார்டுகளில் நகராட்சி சார்பில் போர்வெல் போட்டு மினி டேங்க் அமைக்கும் பணி ஒரு பக்கம் நடந்து வந்தாலும், தற்போதுள்ள நிலைக்கு பயன்பாட்டிற்கு வருவதற்கு காலதாமதம் ஏற்படும்.
நகரத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கடந்த 2021ல் வழங்கியது போல், நகராட்சி சார்பில் டேங்கர் லாரிகள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
