மாவட்டத்தில் சைபர் கிரைம் புகார்களுக்கு தீர்வு காண்பதில் சிக்கல்: தொடர்ந்து நீடிக்கும் பற்றாக்குறையால் போலீசார் திணறல்
மாவட்டத்தில் சைபர் கிரைம் புகார்களுக்கு தீர்வு காண்பதில் சிக்கல்: தொடர்ந்து நீடிக்கும் பற்றாக்குறையால் போலீசார் திணறல்
UPDATED : செப் 10, 2026 07:54 PM
ADDED : செப் 10, 2026 07:43 PM
-நமது நிருபர்-
விழுப்புரத்தில் சைபர் கிரைம் பிரிவில் போலீசார் பற்றாக்குறையால், புகார்கள் மீது போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் உள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி, வங்கி தொடர்பான இணைய குற்றங்கள், பாலியல் வன்கொடுமை தடுப்பு ஆகிய வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்த வழக்குகளை தடுக்கும் வகையிலும், இது போன்ற குற்றங்களால் யாரும் பாதிக்காத வகையிலும் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி, வங்கி தொடர்பான இணைய குற்றங்களுக்கு சைபர் கிரைம் பிரிவும், பாலியல் குற்றங்களை தடுக்க மகளிர் போலீசார் மற்றும் சிங்கப்பெண் ஆகிய பிரிவுகள் இயங்குகின்றன.
விழுப்புரம் சைபர் கிரைம் பிரிவில் துவக்கத்தில், ஒரு இன்ஸ்பெக்டர், இரு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 7 போலீசார் என சிறப்பாக துவங்கப்பட்டது.
காலப்போக்கில் இந்த சைபர் பிரிவில் இருந்த இரு சப்-இன்ஸ்பெக்டர்களும் வெவ்வேறு துறைகளுக்கும், சிலர் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்றும் சென்றனர்.
இதையடுத்து, கடந்த பல மாதங்களாக விழுப்புரம் சைபர் கிரைம் பிரிவில் இன்ஸ்பெக்டர் மற்றும் 6 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக சைபர் கிரைம் பிரிவில், ஆன்லைன் மோசடி குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வது, பெரும் சவாலாக மாறி வருகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிய தொழில்நுட்ப பிரிவில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கூட இல்லை.
சைபர் பிரிவில் குற்றங்கள் அதிகரிப்பது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் கேள்வி எழுப்பினால், போலீசார் தரப்பில் முதலில் வரும் பதில், பற்றாக்குறை என்பதாகவே உள்ளது. சைபர் பிரிவிற்கு போலீசார் தற்போது வரை காலி இடங்களுக்கான பணியிடங்கள் அப்படியே உள்ளன.
இதனால், சைபர் பிரிவில் உள்ள சொற்ப காவலர்கள் மீதான பணிச்சுமை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், இவர்கள் வார விடுமுறை கூட எடுக்க முடியாமல் பணியாற்றி வருவதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கூறியதாவது,
விழுப்புரம் சைபர் கிரைம் பிரிவில் கூடுதலான போலீசாரை உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். விரைவில் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் நாங்கள் எங்களின் பணியை கூடுதல் பணிச்சுமைகளோடு செய்து வருகிறோம்.
மக்கள் இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார்களை தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் பதிவு செய்யலாம். உடனடி உதவிக்கு 1930 என்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற கூடாது. அதில் மர்ம நபர் கூறுவதை கேட்டு ஓ.டி.பி., எண்களை வழங்கவும் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
