ADDED : அக் 22, 2025 12:24 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விழுப்புரத்தில், நேற்று இரவு 8:30 மணிக்கு மழை தொடங்கி பரவலாக பெய்தது. இதனையடுத்து, 9:30 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து விடாமல் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதனால், விழுப்புரம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், இந்திராநகர் ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்க தொடங்கியது.
சித்தேரிக்கரை, தாமரை குளம், திரு வி.க., வீதி, நேருவீதி, மேல வீதி உள்ளிட்ட தாழ்வான இடங்களிலும் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். விழுப்புரம் கே.கே.ரோடு, கலைஞர் நகர் சாலை, சாலாமேடு-திருப்பாச்சனுார் சாலை, சுதாகர் நகர் சாலை, சிங்கப்பூர் நகர் சாலை, தந்தை பெரியார் நகர், சர்வேயர் நகர், சாலாமேடு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு உடைக்கப்பட்ட சாலைகள் சீர்படுத்தாமல் விட்டதால், குளம் போல் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு சென்றனர்.
மாவட்டத்தில் நேற்று காலை 6:00 மணி முதல் மாலை வரை மொத்தம் 137 மி.மீ., மழை பெய்தது. இதன் சராசரி 6.52 மி.மீ., ஆகும்.