/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருக்கோவிலுார் - விழுப்புரம் 4 வழிச்சாலையாவது எப்போது?: இரண்டு மாவட்ட அமைச்சர்கள் கவனிப்பார்களா?
/
திருக்கோவிலுார் - விழுப்புரம் 4 வழிச்சாலையாவது எப்போது?: இரண்டு மாவட்ட அமைச்சர்கள் கவனிப்பார்களா?
திருக்கோவிலுார் - விழுப்புரம் 4 வழிச்சாலையாவது எப்போது?: இரண்டு மாவட்ட அமைச்சர்கள் கவனிப்பார்களா?
திருக்கோவிலுார் - விழுப்புரம் 4 வழிச்சாலையாவது எப்போது?: இரண்டு மாவட்ட அமைச்சர்கள் கவனிப்பார்களா?
UPDATED : செப் 23, 2024 02:13 PM
ADDED : செப் 23, 2024 07:20 AM

திருக்கோவிலுார் : போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற 2 மாவட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலுார் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் மையப்பகுதி. இங்கிருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, சங்கராபுரம், உளுந்துார்பேட்டை, மூங்கில்துறைபட்டு பகுதிகள் 35 முதல் 39 கி.மீ., தொலைவிலும், கள்ளக்குறிச்சி மட்டும் 43 கி.மீ., தொலைவில் உள்ளது.
மைய பகுதியாக உள்ள திருக்கோவிலுார் வழியாக சங்கராபுரம், மூங்கில்துறைபட்டு மற்றும் திருக்கோவிலுார் பகுதியில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் விழுப்புரம் மற்றும் அதனை கடந்து சென்னை, புதுச்சேரி செல்கின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகளை அதிருப்தியில் உள்ளனர்.
திருக்கோவிலுாரில் இருந்து விழுப்புரம் செல்ல 50க்கும் மேற்பட்ட வேகத்தடைகளை கடக்க வேண்டும். 20க்கும் மேற்பட்ட வளைவுகள். இப்படி வளைந்து, நெளிந்து செல்லும் சாலை பல இடங்களில் குறுகலாக உள்ளது. ஒரு சில இடங்களில் தற்போது சாலையை விரிவு படுத்துகிறோம் என்ற பெயரில் கண் துடைப்பிற்காக சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
திருக்கோவிலுாரில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் சாலை முழுதும் விழுப்புரம் மாவட்ட எல்லையில் வருவதால் அப்பகுதி நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர். இவர்கள் இச்சாலையை முழுமையாக ஆய்வு செய்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆங்காங்கே நடைபெற்று வரும் பணியின் தரமும் கேள்விக்குறிதான்.
தற்போது, தமிழகத்தில் மாவட்ட எல்லையை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள் முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் திருக்கோவிலுாரில் இருந்து திருவண்ணாமலை சாலை நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
அதேபோல் திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையையும் முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும். திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில் அதிகரித்துள்ள போக்குவரத்தை கருத்தில் கொண்டு, அதில் இருக்கும் சிரமங்களை கவனித்து, நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும்.
இதற்கு, திருக்கோவிலுார் அமைந்திருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்கும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி அமைச்சரான பொன்முடி இதனை வலியுறுத்த வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.