/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு... எப்போது? காலக்கெடு கடந்து பணிகள் நடப்பதால் இழுபறி
/
திண்டிவனம் மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு... எப்போது? காலக்கெடு கடந்து பணிகள் நடப்பதால் இழுபறி
திண்டிவனம் மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு... எப்போது? காலக்கெடு கடந்து பணிகள் நடப்பதால் இழுபறி
திண்டிவனம் மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு... எப்போது? காலக்கெடு கடந்து பணிகள் நடப்பதால் இழுபறி
ADDED : மே 27, 2025 12:39 AM

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குறுகிய இடத்தில் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வந்தது. தமிழக அரசின் மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த 2023ம் ஆண்டு, திண்டிவனம் மருத்துவமனை,மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த உத்தரவிடப்பட்டது.
மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பை உயர்த்தும் வகையில் ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பொதுப்பணித்துறை மூலம் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம், மருத்துவ கட்டடங்கள் கட்டும் பணி துவங்கியது. கட்டுமான பணிகள் 18 மாதத்திற்குள் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
5 மாடி கொண்ட முதல்பிளாக் கட்டடத்தில், மகப்பெறு மருத்துவம், குழந்தைகள் சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 2வது பிளாக் கட்டடத்தில், அவரச சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ், இதய சிகிச்சை, தீக்காய சிகிச்சை, சி.டி. ஸ்கேன், தலைக்காய சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, எலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிந்துவிடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தும், தற்போது வரை பணிகள் முடியாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 12ம் தேதி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, பொதுப்பணித்துறை மற்றும் ஒப்பந்தாரர்கள் மே 15ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும் என்று தெரிவித்தனர். ஆனால், ஒப்பந்ததாரர் கூறிய காலக்கெடு முடிந்தும் பணிகள் முடியவில்லை. தமிழக அரசின் முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக், சமீபத்தில் மருத்துவமனை கட்டுமான பணியை ஆய்வு செய்து, விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
மருத்துவமனை உள்பகுதியில் தீயணைப்பு சாதனங்கள், மின் விளக்குகள் பொறுத்தும் பணி, கட்டடத்தை சுற்றி புதிய சாலை அமைக்கும் பணி, பழைய கட்டடங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. புதிய மருத்துவமனை வளாகத்தின் நுழைவு வாயில் முன்பு உள்ள அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தை அகற்றினால் தான், புதியதாக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தடையில்லாமல் செல்ல முடியும். இப்பணிகள் எப்போது முடியும் என தெரியவில்லை.
சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் பகுதியாக திண்டிவனம் உள்ளதால் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனை வருவோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி, ஜிப்மர் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அப்போது, செல்லும் வழியிலே பலர் இறந்து விடுகின்றனர். எனவே, திண்டிவனம் மாவட்ட மருத்துவமனையை விரைவில் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.