/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய பஸ் நிலையத்திற்கு, கலைஞர் நுாற்றாண்டு பேருந்து நிலையம்
/
புதிய பஸ் நிலையத்திற்கு, கலைஞர் நுாற்றாண்டு பேருந்து நிலையம்
புதிய பஸ் நிலையத்திற்கு, கலைஞர் நுாற்றாண்டு பேருந்து நிலையம்
புதிய பஸ் நிலையத்திற்கு, கலைஞர் நுாற்றாண்டு பேருந்து நிலையம்
ADDED : செப் 17, 2024 04:19 AM
திண்டிவனம் - சென்னை சாலையில், 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.20 கோடி செலவில் நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் கடந்த 10ம் தேதி திண்டிவனம் நகர்மன்ற கூட்டத்தில், புதிய பஸ் நிலையத்திற்கு, கலைஞர் நுாற்றாண்டு பேருந்து நிலையம் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 25 கவுன்சிலர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில், விழுப்புரம் வடக்கு மாவட்டம் அனைத்து ரெட்டி(கஞ்சம்) நலச்சங்க நிர்வாகிகள், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவை சந்தித்து, திண்டிவனம் புதிய பஸ் நிலையத்திற்கு உத்தமர் ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதன் பேரில் நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்திலிருந்து அனுப்பியிருந்த கடிதத்தின் பேரில், நகர்மன்ற கூட்டத்தில், புதிய பஸ் நிலையத்திற்கு ஓ.பி.ஆர்.பெயரை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் தீர்மானம் நிறைவேறவில்லை.
இதற்கிடையில், திண்டிவனம் புதிய பஸ் நிலையத்திற்கு ஓ.பி.ஆர்.பெயர் தான் வைக்கப்படும் என்றும், இதுகுறித்து தமிழக அரசு முடிவு செய்து அறிவிக்கும் என்ற தகவல் பரவி வருகின்றது.
திண்டிவனம் நகராட்சியில் தி.மு.க.,வை சேர்ந்த நிர்மலாரவிச்சந்திரன் தலைவராக உள்ளார். மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில் தி.மு.க.,வினர் பெரும்பான்மையாக உள்ளனர். எதிர்கட்சி தரப்பில் 6 பேர் மட்டுமே உள்ளனர்.
மன்றத்தில் பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், தீர்மானத்தின் கடிதம், சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாக இயக்குனரை நேரில் சந்தித்து வழங்கப்பட உள்ளதாகவும், கருணாநிதி பெயர்தான் புதிய பஸ் நிலையத்திற்கு வைக்க வேண்டும், வேறு யார் பெயரையும் வைப்பதற்கு நாங்கள் ஒப்புதல் தரமாட்டோம் என்று தி.மு.க., கவுன்சிலர்கள் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

