ADDED : ஆக 07, 2025 11:25 PM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய நெல் திருவிழா நடந்தது.
திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவரசன் தலைமை தாங்கினார். இயற்கை விவசாயிகள் ஆட்சி மன்ற குழு துணைத் தலைவர் குமாரசாமி முருகன் முன்னிலை வகித்தார்.
இயற்கை வேளாண் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர் வெங்கடசுப்பு வரவேற்றார். இயற்கை வேளாண் குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.
இதில் கால்நடை மருத்துவர் முருகவேணி, கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாக்கியராஜ், தோட்டக்கலை அலுவலர் மீனா ஆகியோர் பங்கேற்று இயற்கை விவசாயம் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நெல் ரகங்கள், காய்கறி விதைகள், இயற்கை முறையில் விளைந்த பாரம்பரிய அரிசிகள், கைவினைப்பொருட்கள், இயற்கை முறையில் மாட்டு சாணங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சாம்பிராணிகள் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து எடுத்து வந்து விற்பனைக்காக காட்சிப்படுத்திருந்தனர்.
இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயிகள், வேளாண், கால்நடை, மின்வாரியம், போலீஸ் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.