/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடித்த 3 சகோதரர்கள் நீரில் மூழ்கி மாயம் மரக்காணம் அருகே சோகம்
/
பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடித்த 3 சகோதரர்கள் நீரில் மூழ்கி மாயம் மரக்காணம் அருகே சோகம்
பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடித்த 3 சகோதரர்கள் நீரில் மூழ்கி மாயம் மரக்காணம் அருகே சோகம்
பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடித்த 3 சகோதரர்கள் நீரில் மூழ்கி மாயம் மரக்காணம் அருகே சோகம்
ADDED : டிச 23, 2024 04:50 AM
மரக்காணம் : மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் மூவர் வெள்ளத்தில் அடித்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்- திண்டிவனம் செல்லும் வழியில் பக்கிங்காம் கால்வாய் உள்ளது.
சாலை அகலப்படுத்தும் பணிக்காக பக்கிங்காம் கால்வாய் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது.
இந்த வழியாக வெள்ளம் போல் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. கழுவெளி ஏரியில் உள்ள தண்ணீர் இந்த வழியாக சென்று கடலில் கலப்பதால், இந்த பகுதியில் மீன்கள் அதிகளவு கிடைக்கிறது.
பாலத்தின் கீழ் பகுதி ஆழமாக உள்ள நிலையில், ஆபத்தை உணராமல், கும்பல், கும்பலாக தினமும் அங்கு மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 5:30 மணிக்கு மரக்காணம் சந்தைதோப்பை சேர்ந்த கணேசன் மகன்கள் லோகேஷ், 26; மற்றும் இரட்டையர்களான விக்ரம், 24; சூர்யா,24; ஆகிய மூவரும், பாலத்தின் கீழ் பகுதிக்கு சென்று மீன் பிடித்தனர்.
அப்போது, லோகேஷ் கால்வாயில் தவறி விழுந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
தம்பிகள் விக்ரம், சூர்யா இருவரும் அண்ணனை காப்பாற்ற தண்ணீரில் இறங்கினர். அப்போது அவர்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
வெள்ளத்தில் மாயமான மூன்று பேரையும் மரக்காணம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பக்கிங்காம் கால்வாயில் படகில் சென்று தேடி வருகின்றனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தண்ணீரில் அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்து பல மணி நேரமாகியும் தாசில்தார் பழனி உட்பட அரசு அதிகாரிகள் யாரும் வந்து விசாரணை நடத்தாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் இரவு 10.00 மணியளவில், எம்.எல்.ஏ. அர்ஜூணன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டிவனம் - மரக்காணம் சாலை மற்றும் புதுச்சேரி - சென்னை இ.சி.ஆர். ஆகிய இரு இடங்களில் இரவு 11.00 மணி கடந்தும் போராட்டம் நீடித்தது.