ADDED : மார் 03, 2026 03:24 AM

விழுப்புரம்: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட த.வெ.க., நிர்வாகிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் அருகே டாஸ்மாக் கடை இயங்குகிறது. இந்த கடையில் இருந்து வெளியே வரும் போதை ஆசாமிகள் ரகளை செய்வதால், ரயிலில் இருந்து வெளியே பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
இந்த கடையை அகற்றக் கோரி விழுப்புரம் தெற்கு மாவட்ட த.வெ.க.,வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் டாஸ்மாக் கடை முன் கண்டன கோஷங்களை எழுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் டவுன் போலீசார், நிர்வாகிகளிடம் போராட்டத்தை கைவிட கோரி கேட்டுக் கொண்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
12 பேர் மீது வழக்கு டாஸ்மாக் கடை ஊழியர் சிவஇளங்கோ அளித்த புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து, மதுக்கடை ஷட்டரை மூடி மிரட்டியதாக, த.வெ.க., மாவட்ட செயலாளர் மோகன் உட்பட 12 பேர் மீது, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

