/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லாரிகள் சிறை பிடிப்பு: கிளியனுாரில் பரபரப்பு
/
லாரிகள் சிறை பிடிப்பு: கிளியனுாரில் பரபரப்பு
ADDED : மார் 16, 2024 11:30 PM

வானுார்: கல்குவாரிகளில் இருந்து கிரஷர் பவுடர், ஜல்லி லோடு லாரிகளில் இருந்து புழுதி பறப்பதை கண்டித்து, பொதுமக்கள் டிப்பர் லாரிகளை சிறை பிடித்ததால் பரபரப்பு நிலவியது.
மரக்காணம் அடுத்த பிரம்மதேசம், பெருமுக்கல், முருக்கேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள், கிரஷர் பவுடர் தொழிற்சாலைகள் உள்ளன.
இப்பகுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு டிப்பர் லாரிகள் மூலம் ஜல்லி, கிரஷர் பவுடர் ஏற்றிச் செல்லப்படுகிறது.
இதே போன்று புதுச்சேரியில் இருந்து பெருமுக்கல் பகுதிக்கு கிளியனுார் கடை வீதி வழியாக கொஞ்சிமங்கலம் செல்லும் சாலையை கடந்து ஏரிக்கரை சாலை வழியாக லாரிகள் செல்கின்றன.
தினமும் நுாற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் கடந்து செல்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், கிளியனுார் கடை வீதி சந்திப்பில் சாலைகள் வீணாகி விட்டதோடு, பாதுகாப்பற்ற முறையில் டிப்பர் லாரிகள் தார்பாய் கொண்டு மூடாமல் செல்வதால் அதிகளவில் புழுதி பறக்கிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகள், குடியிருப்பு வாசிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை 7:00 மணிக்கு, அவ்வழியாக எந்த ஒரு பாதுகாப்புமின்றி கிரஷர் பவுடர் ஏற்றிச்சென்ற 7 டிப்பர் லாரிகளை அப்பகுதி மக்கள் மற்றும் கடை வியாபாரிகள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஒருவழிப்பாதையில் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு டிப்பர் லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
மேலும், இது தொடர்பாக சமரச கூட்டம் இன்று17ம் தேதி தாலுகா அலுவலகத்தில் நடத்தப்படும் என தெரிவித்தனர். அதனையேற்று அனைவரும் 8:30 மணியளவில் கலைந்து சென்றனர்.

