/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
யுனெஸ்கோ குழுவினர் செஞ்சி கோட்டையில் ஆய்வு
/
யுனெஸ்கோ குழுவினர் செஞ்சி கோட்டையில் ஆய்வு
ADDED : செப் 28, 2024 07:06 AM

செஞ்சி : செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்வதற்காக யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு நடத்தினர்.
மத்திய அரசு, மராட்டியர்களின் ராணுவ கேந்திரங்களாக விளங்கிய 12 கோட்டைகளை உலக பராரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்துள்ளது.
இதில் 11 கோட்டைகள் மகாராஷ்டிராவிலும், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையும் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசின் பரிந்துரையையேற்று நேற்று தென்கொரியாவில் இருந்து இந்தியா வந்துள்ள யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஐகாம்ஸ் தலைமையிலான குழுவினர் செஞ்சி கோட்டையில் ஆய்வு செய்தனர்.
காலை 10:00 மணிக்கு துவங்கி 1:00 மணி வரை ராஜகிரி கோட்டையின் தரைப்பகுதி, 800 அடி உயரமுள்ள மலைக்கோட்டை ஆகியவற்றில் ஆய்வு நடத்தினர்.
ஆய்வுக்குப்பின், பிற்பகலில் கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக் சிவாச், மாவட்ட வன அலுவலர் சுரேஷ் சோமன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது சர்வதேச சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு, பேரிடர் கால முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
இரண்டாம் கட்டமாக அமைச்சர் மஸ்தான் தலைமையில் மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்களை சந்திந்து கலந்தாய்வு செய்து, உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிப்பதற்கு ஆட்சேபணன ஏதேனும் உள்ளதா என கேட்டறிந்தனர்.
ஆய்வின் போது டில்லியில் இருந்து வந்திருந்த உயரதிகாரிகள் குழுவினர் மற்றும் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வு குறித்து கலெக்டர் பழனி கூறியதாவது:
செஞ்சி கோட்டையில் இன்று (நேற்று) யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு செய்து உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கான தகுதிகளை ஆய்வு செய்தனர். உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தால் சர்வதேச சுற்றுலாத்தலமாக மாறும். மகாபலிபுரம், தஞ்சாவூர் போன்று செஞ்சி கோட்டையும் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
குழுவினர் ஆய்வு அறிக்கை சமர்ப்பித்த 9 மாதங்களுக்கு பிறகு செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.