ADDED : டிச 10, 2024 06:57 AM

செஞ்சி: வி.ஏ.ஓ.,வுக்கு மிரட்டல் விடுத்த ஊராட்சி தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செஞ்சியில் வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி அடுத்த ஒட்டம்பட்டு ஊராட்சியில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிபவர் திருநாவுக்கரசு. கடந்த 6ம் தேதி இவரது அலுவலகத்திற்கு வந்த ஊராட்சி தலைவர் பிரேமாவின் கணவர் திருமலை, திருநாவுக்கரசை தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து வி.ஏ.ஓ., திருநாவுக்கரசு அனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். மறுநாள் திருமலையும் திருநாவுக்கரசு மீது புகார் செய்தார்.
இப்பிரச்சனையில் திருநாவுக்கரசு கொடுத்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கடந்த 7 ம் தேதி வி.ஏ.ஓ., சங்கத்தினர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தனர்.
நேற்று இதே காரணத்தை வலியுறுத்தி செஞ்சி தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து வந்த திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா ஆகியோர் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
