/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நள்ளிரவை கடந்த வி.சி., பொதுக்கூட்டம்: கட்சியினர், போலீசார் தவிப்பு
/
நள்ளிரவை கடந்த வி.சி., பொதுக்கூட்டம்: கட்சியினர், போலீசார் தவிப்பு
நள்ளிரவை கடந்த வி.சி., பொதுக்கூட்டம்: கட்சியினர், போலீசார் தவிப்பு
நள்ளிரவை கடந்த வி.சி., பொதுக்கூட்டம்: கட்சியினர், போலீசார் தவிப்பு
ADDED : மார் 18, 2025 04:41 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த வி.சி., கட்சி பொதுக்கூட்டம் நள்ளிரவையும் தாண்டி நடந்ததால் கட்சியினர், போலீசார் தவிப்பிற்குள்ளாகினர்.
விழுப்புரத்தில் வி.சி.க., சார்பில், தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
தேர்தல் ஆணையம், கட்சிக்கு அங்கீகாரம் அளித்ததை கொண்டாடும் விதமாக இக்கூட்டம் நடந்தது.
மாலை 3:00 மணிக்கு தொடங்கி இரவு 8.00 மணிக்கு முடிக்க திட்டமிட்டு கூட்டத்தை தொடங்கினர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் குறுகிய இடத்தில் மாநாடு போல் பொதுக்கூட்டம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு தொடங்கினாலும், இரவு 8:00 மணிக்கு தான் தலைவர்கள் வந்தனர்.
ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் மஸ்தான், மா.கம்யூ., சண்முகம், இந்திய கம்யூ., முத்தரசன், காங்கிரஸ் பீட்டர்அல்போன்ஸ், தி.மு.க., - வி.சி.க., - எம்.எல்.ஏ.,க்கள் என, பல கட்சி தலைவர்கள் பேசியதால், பொதுக்கூட்டம் இரவு 11:00 மணி வரை நீடித்தது. பிறகு கட்சி தலைவர் திருமாவளவன் பேச தொடங்கி 12:30 மணிக்கு கூட்டத்தை நிறைவு செய்தனர்.
வி.சி.க., நிர்வாகிகள், கட்சியினர் கூட்டத்தால், திருச்சி நெடுஞ்சாலையில் மாலை முதலே போக்குவரத்து பாதித்தது.
இதனால், புதிய பஸ் நிலையத்திற்கு வந்த புறநகர் பஸ்கள் பைபாசில் திருப்பி விட்டனர். ஏராளமான பயணிகளும் அவதியடைந்தனர். நள்ளிரவு வரை கூட்டம் நீடித்ததால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் சோர்வடைந்து, இரவு உணவு கூட அருந்தாமல் பலர் ஓட்டல்களை தேடி அவதிப்பட்டனர்.
வி.சி., பொதுக்கூட்ட பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், இரவு சாப்பாட்டிற்கும் வழியின்றி அவதிப்பட்டனர்.
பொதுக்கூட்டம் முடிந்து, கட்சியினர் பாதுகாப்புடன் செல்வதற்காக, மாவட்டம் முழுதும் முக்கிய சாலை சந்திப்புகளில், போலீசார் பாதுகாப்பு போட்டிருந்தனர். அவர்களும் நள்ளிரவு கடந்து அதிகாலை 2:00 மணி வரை பணியிலிருந்து அவதிப்பட்டனர்.
இதுபோல், கட்சி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் அதிகாரிகள், கூட்டத்தையும், நேரத்தையும் கண்காணிக்க வேண்டும்.
அரசியல் கட்சியினரும், தங்கள் தொண்டர்கள், போலீசாரின் கஷ்டங்களை உணர வேண்டும் என, போலீசார் வேதனை தெரிவித்தனர்.