/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் தொகுதியில் போட்டியிட வி.சி., ஆசை
/
திண்டிவனம் தொகுதியில் போட்டியிட வி.சி., ஆசை
ADDED : மார் 03, 2026 03:13 AM
திண்டிவனம் சட்டசபை (தனி) தொகுதியில் தற்போது அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அர்ஜூனன் உள்ளார். கடந்த தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்த நிலையில், தற்போது தி.மு.க., கூட்டணியில் உள்ள வி.சி., திண்டிவனம் தொகுதியில் போட்டியிடுவதற்கு காய்களை நகர்த்தி வருகிறது.
திண்டிவனத்தில் அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் நேரடியாக போட்டி இருந்த நிலையில், தி.மு.க., தோல்வியடைந்ததால் வி.சி., கட்சி திண்டிவனம் தொகுதியில் அ.தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா என்று யோசிக்கும் நிலையும் உள்ளது.
குறிப்பாக, திண்டிவனம் நகராட்சியில் தி.மு.க., நகர மன்ற தலைவர் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் மீது நகராட்சி ஊழியர் பிரச்னையில் வழக்கு போட்ட விவகாரம் கடும் புகைச்சலை ஏற்படுத்தியது.
வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி திண்டிவனத்தில் வி.சி.,யினர் முன்னின்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவத்தில் இரு கட்சியினரிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது.
இந்த பிரச்னை நீருபூத்த நெருப்பாக இருக்கும் நிலையில், திண்டிவனத்தில் வி.சி., கட்சி வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி எப்படி இருக்கும் என வி.சி.,கட்சி மற்றும் தி.மு.க.,வினர் மத்தியில் விவாதமாக மாறியுள்ளது.
இந்த சூழ்நிலையில், திண்டிவனம் தொகுதியை கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்காமல், மீண்டும் தி.மு.க., போட்டியிட மாவட்ட செயலாளர் மஸ்தான் கட்சி தலைமையிடம் பேசி, காய் நகர்த்தி வருவதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
கடந்த முறை தி.மு.க.,வை தோற்கடித்த அ.தி.மு.க.,விற்கு பாடம் புகட்டும் வகையில், தி.மு.க., வேட்பாளரை திண்டிவனத்தில் நிறுத்தி, பழி தீர்க்க வேண்டும் என மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

