/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்வெட்டில் பெயர் இல்லை என துணை தலைவர் குற்றச்சாட்டு: திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
/
கல்வெட்டில் பெயர் இல்லை என துணை தலைவர் குற்றச்சாட்டு: திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
கல்வெட்டில் பெயர் இல்லை என துணை தலைவர் குற்றச்சாட்டு: திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
கல்வெட்டில் பெயர் இல்லை என துணை தலைவர் குற்றச்சாட்டு: திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு
ADDED : ஆக 01, 2024 07:19 AM

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட கல்வெட்டில், தனது பெயர் இடம் பெறவில்லை என நகர மன்ற துணைத் தலைவர் குற்றம்சாட்டி பேசியதால் பரபரப்பு நிலவியது.
திண்டிவனம் நகர மன்ற கூட்டம், நேற்று மாலை 4:30 மணியளவில் நடந்தது. நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் கமிஷனர் (பொறுப்பு) ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கைகள் மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது:
4வது வார்டு பகுதியில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூடம், காரணமின்றி கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை பணிகள் திட்டமிட்ட படி நடக்கவில்லை. நகராட்சி நிதி ஒதுக்கியும் குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. நேரு வீதியில் புதிய சாலை பேடாமல் இருப்பதால், புழுதி பறக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் தி.மு.க., ஆட்சி மீது கெட்ட பெயர் ஏற்படுகின்றது என தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி பேசினர்.
நகராட்சி வளாகத்தில் ஏற்கனவே ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும்போது, வேறு இடத்தில் பறிமுதல் செய்த பிள்ளையார் சிலை வைத்து கும்பாபிேஷகம் நடத்தியுள்ளனர். இதற்கு கவுன்சிலருக்கு அழைப்பு இல்லை. கோவில் கட்டுவதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயபுரம் பகுதியில் பள்ளிகள் உள்ளதால் நாய்களை பிடிக்க சொல்லி பல முறை கூறியும் நாய்களை பிடிக்கவில்லை.
நகராட்சி சார்பில் 2.15 கோடி ரூபாய் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விபரம் நகர மன்ற தலைவருக்கு தெரியாது. வரும் காலத்தில் நகராட்சி நிதி ஒதுக்கீடு செய்யும் போது, நகர மன்ற தலைவரின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று கமிஷனரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
திண்டிவனத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தின் இரண்டு நுழைவு வாயிலுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், 20 லட்சம் ரூபாய் நகராட்சி வருவாய் நிதியிலிருந்து ஒதுக்கும் தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பணத்தை நகராட்சி நிதியிலிருந்து ஒதுக்காமல், அரசிடம் கேட்டு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
துணைத் தலைவர் குற்றச்சாட்டு
நகர்மன்ற துணை தலைவராக வி.சி.,கட்சியைச் சேர்ந்த ராஜலட்சுமி வெற்றிவேல் பேசுகையில், நகராட்சி சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட கல்வெட்டில், தனது பெயர் இடம் பெறவில்லை என குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து கலெக்டரிடம் புகார் செய்யப் போவதாக கூறி கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். ஏற்கனவே நகராட்சி அரங்கத்தில் துணை தலைவருக்கு தனியாக இருக்கை வேண்டும் என கலெக்டரிடம் புகார் தெரிவித்தார்.
அதன் பிறகு துணைத் தலைவருக்கு தனியாக இருக்கை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.