/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல் குவாரிக்கு மாற்றுப்பாதை அமைக்க எதிர்ப்பு
/
கல் குவாரிக்கு மாற்றுப்பாதை அமைக்க எதிர்ப்பு
ADDED : அக் 23, 2024 05:58 AM

வானுார் : கிளியனுார் அருகே கல்குவாரிக்கு மாற்றுப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கிராம மக்கள் பாதியிலேயே எழுந்து சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அடுத்த கொந்தமூரில் தனியார் கல்குவாரிக்கு செல்வதற்கு ஏற்கனவே ஒரு பாதை உள்ளது. இருப்பினும் குவாரி உரிமையாளர்கள் கடந்த மாதம் ஓடை வழியாக மாற்று பாதை அமைத்தனர். நீர்வரத்து வாய்க்காலை ஆக்கிரமித்து பாதை அமைத்திருப்பதாக கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பான பேச்சுவார்த்தை தாசில்தார் நாராயணமூர்த்தி தலைமையில் நேற்று மாலை 6;00 மணிக்கு வருவாய்த் துறை அலுவலகத்தில் நடந்தது.
குவாரி உரிமையாளர்கள், கொந்தமூர் கிராம மக்கள், இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
அப்போது, கல்குவாரியில் வெடி வைத்து தகர்ப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கிறது; அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சமடைகின்றனர். இந்த சூழலில் மீண்டும் ஒரு பாதை அமைத்தால், அதிக பாதிப்பு ஏற்படும். நீர்வரத்து வாய்க்காலை ஆக்கிரமித்து அனுமதி பெற்றது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
கல்குவாரிக்கு ஏற்கனவே இருந்த வழியை பயன்படுத்த நாங்கள் எதிர்க்கவில்லை. தற்போது ஏற்படுத்தியுள்ள வழிப்பாதையை அனுமதிக்க மாட்டோம் என, கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதற்கு குவாரி உரிமையாளர்கள், பொதுப்பணித்துறை அனுமதியுடன் பாதை அமைத்து வருகிறோம். கனரக வாகனங்கள் செல்வதற்கு வழிவிடாமல் போனாலும், மினி வானகங்கள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
இதற்கும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், இருதரப்பினர் இடையே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து இரவு 7;45 மணிக்கு, கிராம மக்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே எழுந்து சென்றனர்.

