/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கராத்தே போட்டியில் சாதிக்கும் விழுப்புரம் சகோதரர்கள்
/
கராத்தே போட்டியில் சாதிக்கும் விழுப்புரம் சகோதரர்கள்
கராத்தே போட்டியில் சாதிக்கும் விழுப்புரம் சகோதரர்கள்
கராத்தே போட்டியில் சாதிக்கும் விழுப்புரம் சகோதரர்கள்
ADDED : அக் 10, 2024 04:13 AM

விழுப்புரம்: விழுப்புரத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஏழ்மையான நிலையிலும் சர்வதேச அளவிலான கராத்தேப் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.
விழுப்புரத்தில் எய்ம்ஸ் கராத்தே மற்றும் யோகா பயிற்சி மையத்தை சீனியர் பயிற்சியாளர் சென்சாய் ரங்கநாதன் நடத்தி வருகிறார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த பயிற்சி மையத்தில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கராத்தே பயிற்சி பெற்று வருவதோடு, தொடர்ந்து மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய, சர்வதேச அளவிலுமான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்து வருகின்றனர்.
இந்த வகையில், விழுப்புரம் வி.மருதுார் பாரதியார் தெருவைச் சேர்ந்த முருகன், கவிதாவதி தம்பதியரின் பிள்ளைகளான ஹரிஹரன், 14; ரங்கநாதன், 12; ஆகியோர், எய்ம்ஸ் கராத்தே மற்றும் யோகா பயிற்சி மையத்தில், கடந்து 8 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருவதோடு, பல்வேறு மாநில, தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை பெற்று சாதித்து, தமிழகம், விழுப்புரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர்.
9ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஹரிகரன், கடந்த 2021ம் ஆண்டு மலேசியாவில் நடந்த உலகளவிலான கராத்தே போட்டி, ஆசியளவில் கடந்தாண்டு நடந்த கராத்தே போட்டியிலும் கலந்துகொண்டு தங்கம் பதக்கம் வென்றார்.
கடந்தாண்டு சென்னையில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்றார். இதே போல் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தார். அவரது சகோதரர் ரங்கநாதன் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
அவர் கடந்த 2022ம் ஆண்டு நேபாளில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் 2ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். கடந்தாண்டு கடலுாரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவரும், மாநில, தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இருவரும் ஏராளமான பதக்கங்கள், கோப்பைகளையும் வென்று, வீடு முழுவதும் அலங்கரித்து வைத்துள்ளனர்.
விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் இவர்கள் எல்.கே.ஜி., முதலே கராத்த பயின்று, பல்வேறு போட்டியில் வென்று வருவதாக பயிற்சியாளர் ரங்கநாதன் பாராட்டு தெரிவித்தார்.