/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வியாபாரியை வெட்டி நகை, மொபைல்போன் பறிப்பு
/
வியாபாரியை வெட்டி நகை, மொபைல்போன் பறிப்பு
ADDED : ஜூலை 23, 2011 11:57 PM
விழுப்புரம் : விழுப்புரம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் 40.
மேல்செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் 41. நகை வியாபாரிகளான இவர்கள் நேற்று முன் தினம் இரவு 12.15 மணிக்கு சென்னையிலிருந்து ரயிலில் விழுப்புரம் வந்தனர். அங்கிருந்து பைக்கில் வீட்டிற்கு மேல் செட்டித் தெரு வழியாக புதுத் தெருவிற்கு சென்றனர். பின்னால் பைக்கில் வந்த மூன்று பேர் திடீரென கத்தியைக் காட்டி பைக்கை மடக்கினர். சுந்தர் கையிலிருந்த பேக், மொபைல் போனை பறித்தனர். அங்கிருந்து தப்ப முயன்ற முருகனை துரத்திச் சென்று திரு.வி.க., வீதி பூமாரியம்மன் கோவில் அருகே மடக்கி கத்தியால் வெட்டினர். இடது கையில் வெட்டு காயத்துடன் கீழே விழுந்த முருகனிடமிருந்து 50 கிராம் தங்க குச்சியை பறித்துச் சென்றனர். இது குறித்து டவுன் போலீசில் முருகன் புகார் தெரிவித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டி.எஸ்.பி., சேகர், இன்ஸ் பெக்டர் செந்தில்விநாயகம், சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மேல்செட்டித் தெருவிற்கு வந்து சுந்தரிடம் விசாரித்தனர். நகை வியாபாரியான முருகனிடம் ஓராண்டிற்கு முன் சென்னையில் இரண்டரை கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். சென்னை எக்மோர் போலீசார் விசாரித்து திருட்டு ஆசாமிகளை பிடித்து நகைகளை மீட்டு கொடுத்தனர். சில மாதங்களுக்கு முன் முருகனும் புழல் சிறையில் குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். தற்போது மீண்டும் திட்டமிட்டு வந்து முருகனிடமிருந்து நகைகளை பறித்துள்ளனர்.