/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் முக்கிய வணிக வீதிகளில் ஒருவழிப்பாதை அவசியம்! போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை தேவை
/
விழுப்புரம் முக்கிய வணிக வீதிகளில் ஒருவழிப்பாதை அவசியம்! போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை தேவை
விழுப்புரம் முக்கிய வணிக வீதிகளில் ஒருவழிப்பாதை அவசியம்! போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை தேவை
விழுப்புரம் முக்கிய வணிக வீதிகளில் ஒருவழிப்பாதை அவசியம்! போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை தேவை
ADDED : ஜன 15, 2024 06:23 AM

விழுப்புரம் : விழுப்புரம் நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க, முக்கிய வணிக வீதிகளில் ஒருவழிப் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புதிய பஸ் நிலையம், கலெக்டர் பெருந்திட்ட வளாகம் போன்றவை புறநகரில் கட்டப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும், நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் தீர்ந்தபாடில்லை.
குறிப்பாக விழுப்புரம் நகரின் மையமாக உள்ள நேருஜி சாலை புதுச்சேரி, கடலுார், நெய்வேலி மார்க்கங்களுக்கு பிரதான சாலையாக உள்ளதோடு, மார்க்கெட் வீதிகளின் மையப்புள்ளியாக உள்ளதால், திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் நேரங்களில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் நிலை தொடர்கிறது.
மேலும், பிரதான மார்க்கெட் வீதியான காந்தி வீதி, நகைக்கடை, துணிக் கடை வீதியான காமராஜர் வீதி, அதனை இணைக்கும் திரு.வி.க., வீதி, சென்னை சாலை மேலவீதி, வடக்கு தெரு போன்றவை கடும் போக்குவரத்து நெரிசல் நிலையை சந்திக்கிறது.
பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை போன்ற விழாக்காலங்களில் அதிக மக்கள் கூட்டம், வானகங்கள் வரத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
நேற்று முதல் பொங்கல் விழா கொண்டாட்டம் துவங்கிய நிலையில், கடந்த 2 நாட்களாக நகருக்கு பொருள் வாங்க வரும் பொதுமக்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்னர்.
போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை இருந்து வரும் நிலையில், விழாக் காலங்களிலாவது தற்காலிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டிவனம், திருக்கோவிலுார் போன்ற சிறிய நகர பகுதிகளில் கூட நீண்டகாலமாக ஒருவழிப் பாதை திட்டம் உள்ளது. ஆனால், மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில் ஒரு சாலை கூட ஒருவழிச்சாலையாக அமைக்காதது ஏன் என தெரியவில்லை.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், போலீசாரும், ஆய்வு செய்து, நெரிசல் மிகுந்த சாலையை ஒரு வழிச் சாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதாரணமாக கடும் நெரிசல் ஏற்படும் காமராஜர் வீதி, காந்தி வீதிக்கு, மேல்தெரு, திரு.வி.க., வீதிகள் வழியாக ஒருவழிப்பாதை ஏற்படுத்தலாம். அதற்கு இணையாக உள்ள பெருமாள் கோவில் வீதி, வடக்கு வீதி போன்றவற்றை எளிதாக ஒருவழிப் பாதையாக பயன்படுத்த முடியும்.
இதே போல், நெரிசல் மிகுந்த நேருஜி சாலைக்கு கே.கே.ரோடு, பூந்தோட்டம் பாதை போன்றவற்றை ஒருவழிப் பாதையாக பயன்படுத்த முடியும். இந்த ஒருவழிப்பாதை திட்டத்தை செயல்படுத்த புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி., தீபக் சிவாச் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.