/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மினி லாரி மீது பஸ் மோதல்: ஒருவர் பலி
/
மினி லாரி மீது பஸ் மோதல்: ஒருவர் பலி
ADDED : ஆக 01, 2011 02:52 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே மினி லாரி மீது தனியார் பஸ் மோதியதில் ஒருவர் இறந்தார்.
ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த பொன்னாண்டிவளைவு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், 25. நடனக்குழு நிகழ்ச்சிகளுக்கு ஆடியோ அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு நடன நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மினி லாரியில் ஊருக்குத் திரும்பினார். இவருடன் நடனக் குழுவினர் மற்றும் ஆடியோ உதவியாளர்கள் உள்ளிட்ட 7 பேர் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை திண்டிவனம் பைபாஸ் மேம்பாலம் அருகே சென்ற மினி லாரி மீது பின்னால் வந்த தனியார் பஸ் திடீரென மோதியது.
இதில் மினி லாரி கவிழ்ந்து, அதில் பயணம் செய்த 7 பேரும் படுகாயமடைந்தனர். அனைவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் இறந்தார். விபத்தில் சிக்கிய சக்திவேல் 20, ரத்தினவேல் 21, பெரியசாமி 17, செந்தில்குமார் 25, அர்பிதா 20, லதா 22 ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பெங்களூரைச் சேர்ந்த நடன பெண் அர்பிதா, விபத்தில் இறந்த சதீஷ் இருவருக்கு விரைவில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். சதீஷ் உடலைப் பார்த்து அர்பிதா கதறி துடித்தார். விபத்து குறித்து திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.