/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆற்று வெள்ளத்தில் சிக்கியது விழுப்புரம் பண்ருட்டி சாலை
/
ஆற்று வெள்ளத்தில் சிக்கியது விழுப்புரம் பண்ருட்டி சாலை
ஆற்று வெள்ளத்தில் சிக்கியது விழுப்புரம் பண்ருட்டி சாலை
ஆற்று வெள்ளத்தில் சிக்கியது விழுப்புரம் பண்ருட்டி சாலை
ADDED : டிச 03, 2024 06:58 AM

விழுப்புரம்: தென்பெண்ணை ஆற்று வெள்ளம் சாலையின் குறுக்கே பாய்ந்ததால், விழுப்புரம் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், 'பெஞ்சல்' புயல் பாதிப்பு காரணமாக, தொடர்ந்து கனமழை பெய்தது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால். சாத்தனுார் அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு
18 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. இதனால், தென்பெண்ணை ஆற்றங்கரையின் இரு புறமும் உள்ள ஏராளமான கிராமங்களில், வெள்ள அபாயம் ஏற்பட்டது.
விழுப்புரம்- பண்ருட்டி சாலையில், கண்ட்ரக்கோட்டை மேம்பாலத்தின் வழியாக
தென்பெண்ணை ஆறு கடந்து செல்கிறது. நேற்று காலை முதல் சின்னக்கள்ளிப்பட்டு துவங்கி, கண்டரக்கோட்டை வரையிலான கிராமங்களில் ஆற்று வெள்ளம் புகுந்தது.
இதேபோல், கண்ட்ரக் கோட்டை மேம்பாலம் துவங்கி வாணியம்பாளையம் வரை பல்வேறு கிராமங்களிலும், ஆற்று வெள்ள நீர் புகுந்தது.
இதனால், நுாற்றுக்கணக்கான வீடுகளில் மழை நீர் புகுந்தது. பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள், கரும்பு, சவுக்கு, வாழை உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் மிகுந்த சேதமடைந்தன.
இதற்கிடையே, நேற்று மாலை 5:00 மணி முதல் பண்ருட்டி - விழுப்புரம் சாலையில் பல்வேறு இடங்களில் ஆற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால், வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நேற்று இரவு முழுவதும், நுாற்றுக்கணக்கான தன்னார்வ இளைஞர்கள், போலீசாருடன்,போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.