/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய கோவில் குளம் மீட்கப்படுமா?
/
ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய கோவில் குளம் மீட்கப்படுமா?
ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய கோவில் குளம் மீட்கப்படுமா?
ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய கோவில் குளம் மீட்கப்படுமா?
ADDED : செப் 11, 2011 10:58 PM
செஞ்சி : செஞ்சியில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் குளத்தை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி நகரில் பல கோவில்கள் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டன. இதில் சிதிலமான சில கோவில்களை சமீப காலமாக பக்தர்கள் திருப்பணி செய்து வழிபாடு நடத்த துவங்கி உள்ளனர். செஞ்சி பீரங்கி மேட்டில் 500 ஆண் டுகள் பழமையான அருணாச்சலேஸ் வரர் கோவிலும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு இல்லாமல் சிதிலமடைந்து காணப்பட்டது. இந்த கோவிலை 4 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்கள் புதுப்பிக்க துவங்கினர். பெரும்பகுதி பணிகள் முடிவடைந்த நிலையில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோவிலின் எதிரே உள்ள குளமும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன் படுத்தாமல் உள்ளது. இதனால் சிலர் குளத்தின் கரைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். செஞ்சிகோட்டை அகழியில் இருந்து குளத்திற்கு தண்ணீர் வந்த வாய்க்காலையும் ஆக்கிரமித்து மூடிவிட்டனர். கரைகளிலும், குளத்தின் உள்ளேயும் மண்ணை கொட்டி மேடாக்கி வீடு கட்டியவர்கள், கோவில் குளம் என்றும் பாராமல் தங்கள் வீட்டு செப்டிக் டேங் குழாயை நேரடியாக குளத்தில் விட்டதால் குளத்து தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. ஆழமான குளத்தில் அசுத்தமான தண்ணீர் பல ஆண்டுகளாக தேங்கியதால் இப்பகுயின் நிலத்தடி நீரும் அசுத்தமடைந்துள்ளது. அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தற்போது நடந்து வரும் திருப்பணிகள் அடுத்த சில மாதங்களில் முடிந்து கும்பாபிஷேக பணிகள் துவங்க உள்ளனர். இந்நிலையில் கோவில் குளம் செப்டிக் டேங்க்காக பயன்படுத்தி வருவதும், குளத்தை பக்தர்கள் பயன்படுத்த முடியாமல் ஆக்கிரமிப்பில் இருப்பதும் பக்தர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, தூய்மைபடுத்தி தண்ணீர் வரத்திற்கு வழி செய்ய வேண்டும்.