/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீரப்பாண்டியில் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
/
வீரப்பாண்டியில் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
வீரப்பாண்டியில் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
வீரப்பாண்டியில் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
ADDED : செப் 13, 2011 11:24 PM
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அடுத்த வீரப்பாண்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தேவனூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஒட்டம்பட்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நாயனூர், வீரப்பாண்டி, ஒட்டம்பட்டு, அருணாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் சப்ளை செய்யப் படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு தேவனூர் இத்திட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து ஒட்டம்பட்டு கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தேவனூருக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் வீரப்பாண்டி கிராமத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஊராட்சி தலைவர் சார்பில் கலெக்டர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த ஒரு மாதமாக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வீரப்பாண்டி கிராமத்திற்கு சரிவர குடிநீர் விநியோகிக்காமல் அலைகழித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வீரபாண்டி கிராமத்தில் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முத்துராமன் தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்கு ஊராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், பி.டி.ஓ., ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்னிலையில் உடனடியாக சமாதானக் கூட்டம் நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.கிராம மக்கள் போராட்டம் காரணமாக திருக்கோவிலூர்-வேட்டவலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.பயன்படாத தொட்டி: வீரப்பாண்டி ஊராட்சியில் மூன்று குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளது. குடிநீர் விநியோகத்தை சீரான முறையில் வழங்குவதற்காக நான்காவதாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்து நான்கு மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராமல் குடிநீர் தொட்டியை காட்சிப் பொருளாகவே வைத்துள்ளனர்.