/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வரும் 23ம் தேதி தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை
/
வரும் 23ம் தேதி தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை
ADDED : செப் 20, 2024 09:55 PM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் வரும் 23ம் தேதி மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் நடக்கிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் விழுப்புரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் வரும் 23ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.
முகாமில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், ஆவின் ஆகிய அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சக்கரை உற்பத்தி நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் ஒரே இடத்தில் பங்கேற்று தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.
ஐ.டி.ஐ., முடித்தோர் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். ஐ.டி.ஐ., சேர்ந்து பயிற்சி பெற முடியாத 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் கல்வி தகுதியுடையோர் நேரடியாக தொழிற்சாலைகளில் அப்ரண்டிஸ்சாக சேர்ந்து 3 முதல் 6 மாத காலம் அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.
இந்த பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை 8,500 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
இது தொடர்பான தகவல்கள் பெற விரும்புவோர், உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தொலைபேசி 04146 294989 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.