ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறு :ஒன்றரை மணிநேரம் காத்திருப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறு :ஒன்றரை மணிநேரம் காத்திருப்பு
ADDED : ஏப் 23, 2026 03:47 PM
வானுார்: ஒழிந்தியாப்பட்டு ஓட்டுச்சாவடி மையத்தில் இயந்திர கோளாறு காரணமாக ஒன்றரை மணி நேரம் வாக்காளர்கள் காத்திருந்தனர்.
வானுார் (தனி) சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 9,824 ஓட்டுகளுக்கு, 299 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டது. நேற்று காலை 7:00 மணிக்கு பூத் ஏஜன்ட்டுகள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது.
அதில், ஒழிந்தியாப்பட்டு அருணாசலம் நிதியுதவி பெரும் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையத்தில் ஒரு பூத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. ஆரம்பத்திலேயே இயந்திரக்கோளாறு காரணமாக ஓட்டுப்பதிவு துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் முன்கூட்டியே ஓட்டுப்பதிவு செய்ய வந்த பெண்கள், தரையில் அமர்ந்து வெகு நேரமாக காத்திருந்தனர்.
ஓட்டுச்சாவடி மைய அலுவலர், அளித்த தகவலின் அடிப்படையில் மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டது. பின், 8:40 மணிக்கு புதிதாக கொண்டு வரப்பட்ட இயந்திரத்தில் ஓட்டுப்பதிவு துவங்கியது. ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து சென்றனர்.
