/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல்... அமோகம்! 9,500 ஏக்கர் அளவில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு
/
விழுப்புரம் மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல்... அமோகம்! 9,500 ஏக்கர் அளவில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல்... அமோகம்! 9,500 ஏக்கர் அளவில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல்... அமோகம்! 9,500 ஏக்கர் அளவில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு
ADDED : மார் 05, 2026 03:43 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தர்பூசணி அறுவடை தொடங்கி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்குச் செல்கிறது. நற்பலன் தருவதால் 9,500 ஏக்கர் பரப்பில் சாகுபடியும் அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், கோடை வெயிலின் தாக்கம் பிப்ரவரி இறுதியிலிருந்து அதிகரித்து வருகிறது. இதனால், பொது மக்கள் குளிர்பானங்களை தவிர்த்து அதிகம் நீர்ச்சத்துள்ள தர்பூசணி போன்ற இயற்கை பழங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
எளிதாக, மலிவாக கிடைக்கும் தர்பூசணியின் சுவையும், விட்டமின் ஏ, சி, போன்ற சத்துக்களும், அனைத்து வயதினரும் ஆசையோடு சாப்பிடும் விதத்தில் இருப்பதால் அதிகளவில் விற்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம், ஒலக்கூர், வானுார், மேல்மலையனுார், மயிலம், முகையூர், விக்கிரவாண்டி, காணை ஆகிய வட்டாரங்களில் அதிகளவில் தர்பூசணி பயிரிடப்படுகிறது. 9,500 ஏக்கர் பரப்பளவில் இந்தாண்டு தர்பூசணி பயிரிட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடவு செய்வது வழக்கம். மழைக்காலம் என்பதால், தற்போது, வீட்டில் தட்டுகளில் விதைகளை விதைத்து, நாற்றாக்கி அதனை பிறகு நிலத்தில் நடவு செய்கின்றனர். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை பயன்படுத்தி, 5 அடி இடை வெளிவிட்டு நடவு செய்கின்றனர். நன்னீர் பாசனத்தை பின்பற்றி சிக்கனமாக நீர்பாசனம் மற்றும் உரமிடுதலை பின்பற்றுகின்றனர்.
தர்பூசணி விதைப்பு செய்த 65 முதல் 70 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவம்பரில் விதைப்பு செய்யப்பட்ட தர்பூசணி பயிர், முதல் கட்டமாக ஜனவரி மாதத்தில் அறுவடை செய்தனர்.
அப்போது, தர்பூசணி அறுவடை துவக்கம் என்பதால், நல்ல விலை கிடைத்துள்ளது. டன் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதே போல், தற்போது இரண்டாம் கட்ட அறுவடை நடந்து வருகிறது. பருவமழை முடிந்து டிசம்பர் இறுதியில் இந்த இரண்டாம் பருவ சாகுபடி நடந்தது. அதில் தர்பூசணி விளைச்சல் ஏற்பட்டு, தற்போது மார்ச் தொடக்கத்தில் அறுவடை தொடங்கி நடந்து வருகிறது. இப்போது, டன் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 15 டன் அளவில் விளைச்சல் கிடைக்கிறது. பழங்களில் தரம், எடையை பொருத்து வியாபாரிகள் விலை வைத்து எடுக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் தர்பூசணி பழங்கல், சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், மேலும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
வேளாண்துறை மானியம் தர்பூசணி சாகுபடி குறித்து, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் அன்பழகன் கூறியதாவது: தர்பூசணி பயிர் 65 முதல் 70 நாட்களில் குறுகிய காலத்தில் லாபம் தரும் சாகுபடி என்பதால், விழுப்புரம் மாவட்டத்தில் தர்பூசணி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆண்டு தோறும் பயிரிடும் பரப்பும் உயர்ந்து வருகிறது. ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. சாகுபடியை ஊக்குவிப்பதற்கு, தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் மூலம் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் தர்பூசணி விதை மற்றும் இடுபொருள்கள், 1250 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
மேலும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 125 ஏக்கருக்கு தலா ரூ.9600 வழங்கப்படுகிறது. தண்ணீர் பாசன கருவிகள் 1750 ஏக்கருக்கு தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் துறை சார்பில் ஆலோசனை வழங்கி நேரடி கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

