UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 08:04 PM
செஞ்சி: செஞ்சி பேரூராட்சி சார்பில் துாய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான நலத்திட்ட முகாம் நடந்தது.
நாடு முழுவதும் 'துாய்மையே சேவை 2026' இயக்கம் கடந்த செப்., 17 ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை நடக்கிறது.
அதன்படி, செஞ்சி பேரூராட்சி சார்பில் செஞ்சி–தேசூர் பாட்டையில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடந்த முகாமில், பேரூராட்சி செயல் அலுவலர் குணாளன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து துாய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும் மருத்துவ பரிசோதனை முகாமையும் துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் துாய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை, கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றில் பயனாளிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் நடமாடும் மருத்துவமனை டாக்டர் ரியாஸ் ஹூதின், பேரூராட்சி உதவி பொறியாளர் செந்தமிழ்செல்வன், சுகாதார ஆய்வாளர் சுதர்சன், சுகாதார அலுவலர் ராஜா, சுகாதார மேற்பார்வையாளர் செந்தில்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
