/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோலியனுார் தன்னார்வ இளைஞர்கள் குழுவிற்கு சபாஷ்! முழுமையாக மக்கள் நிதியில் ஏரி புனரமைப்பு
/
கோலியனுார் தன்னார்வ இளைஞர்கள் குழுவிற்கு சபாஷ்! முழுமையாக மக்கள் நிதியில் ஏரி புனரமைப்பு
கோலியனுார் தன்னார்வ இளைஞர்கள் குழுவிற்கு சபாஷ்! முழுமையாக மக்கள் நிதியில் ஏரி புனரமைப்பு
கோலியனுார் தன்னார்வ இளைஞர்கள் குழுவிற்கு சபாஷ்! முழுமையாக மக்கள் நிதியில் ஏரி புனரமைப்பு
ADDED : அக் 08, 2025 12:33 AM

விழுப்புரம்; கோலியனுார் ஏரியில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, 53 ஆண்டுக்கு முந்தைய பழைய நிலைக்கு, நீர்பிடிப்பு பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக மக்களிடம் ரூ.35 லட்சம் நிதி திரட்டி, தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கிராம தன்னார்வ இளைஞர்கள், முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அடுத்த கோலியனுார் கிராமத்தில் உள்ள 37 ஏரி, பல்வேறு ஆக்கிரப்புகளால் நாளுக்குநாள் பரப்பளவு குறைந்து போனது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவான 37 ஏக்கரில், பல இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதுடன், குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றப்பட்டது.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட நீர்நிலை புனரமைப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குழு சார்பில், கோலியனுார் ஏரியை புனரமைக்கும் பணி துவக்கப்பட்டது. இதன் தலைமை ஒருங்கிணைப்பாளரான கோலியனுார் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மணிகண்டன் மேற்பார்வையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கோலியனுார் நீர்நிலை புனரமைப்பு குழுவின் மூலம், 37 ஏக்கர் ஏரி பரப்பளவு மற்றும் 2 ஏக்கர் நீர் பிடிப்பு பகுதி கண்டறியப்பட்டது. கடந்த 2024 ம் ஆண்டு விழுப்புரம் கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டர் ஆகியோர் கோலியனுார் ஏரிப் பகுதியை நேரில் பார்வையிட்டனர்.
பின்னர், கோலியனுார் ஒன்றிய அலுவலகத்தின் மேற்பார்வையில், ஏரியை பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல் ஆகிய பணிகளை எக்ஸ்னோரா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்வதற்கு நீர்நிலை புனரமைப்பு குழுவிற்கு அனுமதி வழங்கி, கடந்தாண்டு மார்ச் 13 ம் தேதி கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.
ஏரியை புனரமைப்பதற்காக சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள், கிராம இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் மூலம் பங்களிப்பு நிதியாக ரூ.35 லட்சம் திரட்டப்பட்டது.
சென்னை எக்ஸ்னோரா அமைப்பின் வாடகையில்லா ஜே.சி.பி., பொக்லைன், ஹிட்டாச்சி இயந்திரங்கள், காயத்ரி சாரிட்டிஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டன.
கடந்தாண்டு ஏப்., 3 ம் தேதி ஊராட்சி தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய அதிகாரிகள் முன்னிலையில் முதல் கட்ட பணி துவங்கியது.
இதன்படி, ஏரியின் கிழக்கு பகுதியில் 1.2 கி.மீ., துாரத்திற்கு முட்புதர்கள் அகற்றப்பட்டு, மண் கரை பலப்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, கலாம் நற்பணி குழுமம் சார்பில், ஏரி பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஏரியின் மொத்த பரப்பளவு, 57 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, ஏரியின் மையப்பகுதியில் உள்ள தாமரை குளப்பகுதி ஆழப்படுத்தப்பட்டு, பெரிய அளவிலான பறவைகள் அமர்வதற்கான மண் திட்டுகள் உருவாக்கப்பட்டன.
தொடர்ந்து ஏரி நுழைவு பகுதியில் இருந்த குப்பைகளை முழுமையாக அகற்றி, 43 அடி உயரம் மற்றும் 20 மீட்டர் விட்டம் கொண்ட, மண் திட்டுகள் அமைக்கப்பட்டன.
ஐந்தாம் கட்டமாக, மேற்குபுறத்தில் கரைந்து போயிருந்த ஏரியின் கரைகள் புதிதாக அமைக்கப்பட்டன. ஏரியின் மேற்கு புறம், வடக்கு புறம் ஆகிய பகுதிகளில் 1.6 கி.மீ., துாரத்திற்கு புதிய கரைகள் (20 அடி அகலம்) அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், 5 ஏக்கர் பரப்பளவில் நான்கு அடுக்கு முறையில் அழகிய குளம் போன்று, ஏரியில் மழைநீர் தேங்குவதற்கான பள்ளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏரிக்கரை பகுதியில் 8 ஆயிரம் பனை விதைகள், நடவு செய்யப்பட்டுள்ளன.
கோலியனுார் ஏரி புனரமைப்பு பணி நடைபெற்ற பின், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மேலும், மாவட்ட மக்களிடம், நீர் நிலையின் அத்தியாவசியம், ஏரி பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
பல்வேறு கிராமங்களில் உள்ள இளைஞர்கள், தன்னார்வலர்கள் பொதுமக்களின் பங்களிப்புடன் ஏரிகளை புனரமைப்பதற்கு ஆர்வத்துடன் முன் வந்துள்ளனர்.