தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் எப்போது? ‘கவனிப்பு’ நடந்தும் காத்திருக்கும் அவலம்
தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் எப்போது? ‘கவனிப்பு’ நடந்தும் காத்திருக்கும் அவலம்
UPDATED : நவ 02, 2026 05:47 PM
ADDED : நவ 02, 2026 05:45 PM
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுதான் பிரதான இடத்தில் இருக்கும். அந்த அளவிற்கு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த பட்டாசு கடைக்கு உரிமம் பெறுவதில் இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது.
தீபாவளி பண்டிகையின்போது ஒரு சில இடங்களில் பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பட்டாசு கடைக்கு நிரந்தர உரிமம், தற்காலிக உரிமம் வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 8ம் தேதி கொண்டாட உள்ளது. தீபாவளி வருவதற்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை நடத்துவதற்கு உரிமம் வழங்க கோரியவர்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்காலிகமாக பட்டாசு கடைக்கு விண்ணப்பத்துள்ளவர்கள், ஆன் லைனில் விண்ணப்பம் அனுப்புவதில் துவங்கி தீயணைப்புத்துறை, போலீஸ், தாலுகா அலுவலகம், சப் கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய்த்துறை என அனைத்து அலுவலகங்களுக்கும் படியேற வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு அனைத்து நிலைகளிலும் தற்காலிக அனுமதிக்கு முறைப்படி ‘கவனிப்பு’ நடந்தால்தான் தற்காலிக உரிமம் கிடைக்கும் நிலை இன்றளவும் எழுதப்படாத சட்டமாக உள்ளது.
ஒரு தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு தீயணைப்புத்துறையில் என்.ஓ.சி.,பெறுவதிலிருந்து கடைசி நிலை வரை குறைந்தது 60 ஆயிரம் ரூபாய் வரை ஒரு விண்ணப்பதாரர் செலவிட்டதால்தான் உரிமம் வாங்க முடியும் என்று தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பத்திவர்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு முறைப்படி ‘கவனிப்பு’ நடத்தியும் இதுவரை உரிமம் வழங்கப்படவில்லை என விண்ணப்பித்தவர்கள் புலம்புகின்றனர்.
மாவட்ட வருவாய்துறை அதிகாரி தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமத்தை விரைந்து வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
