/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருக்கோவிலுார் தொகுதி முழுவதும் விழுப்புரத்துடன் இணைப்பது... எப்போது?
/
திருக்கோவிலுார் தொகுதி முழுவதும் விழுப்புரத்துடன் இணைப்பது... எப்போது?
திருக்கோவிலுார் தொகுதி முழுவதும் விழுப்புரத்துடன் இணைப்பது... எப்போது?
திருக்கோவிலுார் தொகுதி முழுவதும் விழுப்புரத்துடன் இணைப்பது... எப்போது?
ADDED : ஜூலை 30, 2025 11:07 PM

திருக்கோவிலுார்: கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லுார் தாலுகா மக்களின் குறைகளை நிறைவேற்ற திருக்கோவிலுார் தொகுதி முழுவதையும் விழுப்புரம் மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி கடந்த ஆட்சியில் புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அப்போது பொதுமக்களின் விருப்பத்தை மீறி திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதனால திருக்கோவிலுாரில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள அரகண்டநல்லுாரில் அமைந்துள்ள திருக்கோவிலுார் ரயில் நிலையம், ஒழுங்குமுறை விற்பனை கூடம், போக்குவரத்து கிளை பணிமனைகள் விழுப்புரத்துடன் சேர்க்கப்பட்டது.
திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., கட்டுப்பாட்டில் இருந்த கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லுார் தாலுக்கா விழுப்புரம் ஆர்.டி.ஓ.,க்கு மாற்றப்பட்டது. இதனால் 5 தாலுக்காக்களை ஆர்.டி.ஓ., கவனிப்பதால், பணிச்சுமை அதிகரித்து திருக்கோவிலுார் மக்களின் கோரிக்கைகள் கிடப்பில் போடப்படுகிறது. விழுப்புரத்தில் இயங்கும் ஆர்.டி.ஓ., மற்றும் பிற துறை அலுவலகங்களுக்கு 40 கி.மீ., பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
திருக்கோவிலுாரில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ள அரங்கண்டநல்லுார் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகள் விசாரணைக்கு, திருக்கோவிலுாரைத் தாண்டி திருவெண்ணைநல்லுார் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
திருக்கோவிலுார் தொகுதியின் 75 சதவீத பகுதிகள் விழுப்புரம் மாவட்டத்திலும், எஞ்சிய 25 சதவீதம் பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இடம்பெறுகிறது. இதனால் திருக்கோவிலுார் தொகுதி தேர்தல் நடத்தும் மாவட்ட அதிகாரியாக விழுப்புரம் கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள திருக்கோவிலுார் தொகுதியைச் சேர்ந்த நகராட்சி மற்றும் 20 ஊராட்சி மக்கள், வாக்காளர்கள் அட்டை பெறுவது, திருத்தம் செய்ய விழுப்புரம் செல்ல வேண்டும்.
இதுபோல், 20 ஊராட்சிகளுக்கான வளர்ச்சி பணி திட்டங்களும், மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
திரிசங்கு சொர்க்க நிலையில் இருக்கும் திருக்கோவிலுாரை விழுப்புரம் மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும் என 20 கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். அவ்வாறு நடந்தால், 5,713 பேர் கொண்ட அரகண்டநல்லுார் சிறிய பேரூராட்சி மற்றும் மணம்பூண்டியை திருக்கோவிலுார் நகராட்சியுடன் இணைத்து செலவீனத்தை குறைக்க முடியும்.
திருக்கோவிலுார் தொகுதி முழுவதையும் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைத்தால், திருக்கோவிலுார் கோட்டாட்சியரின் கட்டுப்பாட்டில் திருக்கோவிலுார், கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லுார் தாலுக்கா வரும். விழுப்புரம் கோட்டாட்சியரின் பணிச்சுமையின் குறைவதுடன், இப்பகுதி மக்களின் அனைத்து விதமான சிரமங்களும் தவிர்க்கப்படும்.
திருக்கோவிலுார் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கும்போது, எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய வியாபாரிகள், பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்த பொன்முடி எம்.எல்.ஏ., தி.மு.க., ஆட்சி வந்தால், திருக்கோவிலுார் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்படும் என உறுதி அளித்தார்.
ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டு கடந்தும், திருக்கோவிலுார் விழுப்புரத்துடன் இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக விழுப்புரம் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் தொகுதி மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லை.
இதன் காரணமாகவே நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திருக்கோவிலுார் தொகுதியில் அ.தி.மு.க., அதிக ஓட்டுகளை பெற்றது. தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையை செயல்படுத்தினால் மட்டுமே வரும் சட்டசபை தேர்தலில் வாக்காளர்களின் ஆதரவு பெறமுடியும். தவறினால் கடந்த லோக்சபா தேர்தலை விட மிக மோசமான முடிவை ஆளும் கட்சி சந்திக்க நேரிடும் என தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.