/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முண்டியம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அமைப்பது எப்போது?: 15 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை
/
முண்டியம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அமைப்பது எப்போது?: 15 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை
முண்டியம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அமைப்பது எப்போது?: 15 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை
முண்டியம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அமைப்பது எப்போது?: 15 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை
ADDED : மே 28, 2025 11:58 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தில் ஒரத்தூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க சுற்றுவட்டார 30 கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ரயில்கள் அனைத்தும் விழுப்புரம் அருகில் உள்ள முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தை கடந்தே செல்கின்றது. ஒவ்வொரு நாளும் அதிவிரைவு, எக்ஸ்பிரஸ், பேசஞ்சர், சரக்கு ரயில் என சராசரியாக 70 ரயில்கள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன.
கடந்த 2010ம் ஆண்டு முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவ கல்லுாரி துவங்கிய பின்பு, இந்த ரயில் நிலையம் முக்கியத்துவம் பெற்றது. இந்த ரயில் நிலையத்தின் அருகிலே, முண்டியம்பாக்கம் ஒரத்துார் - லட்சுமிபுரம் சாலையில், 117 வது ரயில்வே கேட் (லெவல் கிராசிங்) உள்ளது.
இச்சாலை வழியாக சென்னை நெடுஞ்சாலையில் இருந்து, மேற்கு பகுதியில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். சுற்றுவட்டார கிராம மக்கள், அவசர தேவைக்காக விழுப்புரம் அரசு கல்லுாரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் வரவும், விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்கின்ற விளை பொருட்கள், கரும்புகளை இச்சாலை வழியாக விழுப்புரத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில், ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் அமைந்திருப்பதால், ஒவ்வொரு அரை மணி முதல் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை ரயில்வே கேட் மூடி திறக்கப்படுகிறது. அப்போது, 15 முதல் 20 நிமிடத்திற்கு கேட் மூடப்படுவதால், மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள், வாகனங்கள் நீண்ட நேரம் காத்து கிடக்கும் நிலை உள்ளது.
சரக்கு ரயில்கள் வரும்போது, ரயிலில் இருந்து சரக்குகளை ஏற்ற வரும் லாரிகள் சாலையை அடைத்துக் கொண்டு செல்வதாலும், ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தி வைப்பதால், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இரவு நேரத்தில் அவசரமாக மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் ரயில்வே கேட்டில் சிக்கி கொண்டால், 200 மீட்டர் துாரத்தில் உள்ள மருத்துவமனையை, 20 நிமிடம் கழித்தே அடைய கூடிய நிலை உள்ளது.
இப்பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு முதல் மேம்பாலம் அமைக்க அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் நலன் கருதி, மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தும் கொடுத்து, ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.