தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பாதாள சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு... எப்போது? நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்

பாதாள சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு... எப்போது? நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்

பாதாள சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு... எப்போது? நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்


UPDATED : ஜூன் 30, 2026 08:01 PM

ADDED : ஜூன் 30, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2026 08:01 PM ADDED : ஜூன் 30, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் நடந்த நகர மன்ற கூட்டத்தில் பாதாள சாக்கடை பிரச்னை குறித்து கவுன்சிலர்கள் அதிகாரிகளிடத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.. விழுப்புரம் நகரமன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சித்திக்அலி, நகராட்சி கமிஷனர் ஷியாமளாதேவி, பொறியாளர் புவனேஸ்வரி, நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் மற்றும் குறைகள் குறித்து பேசியதாவது:

விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அங்கு மலைபோல் குவியும் குப்பைகளை அகற்றிட வேண்டும்.

மகாராஜபுரத்தில் கட்டி முடித்த எரிவாயு தகனமேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் கலையரங்கம் அமைக்க வேண்டும். பழைய நகராட்சி அலுவலகத்தில் டவுன் ஹால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

விரிவாக்கம் செய்த பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பாதாள சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் தனியார் நிறுவனம் அருகே அடிக்கடி பாதாள சாக்கடை பைப்லைன்கள் சேதமானதாக கூறி சாலையை தோண்டி அந்த பைப்லைன்கள் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ஆயில் கழிவுகள் தான்.

நகராட்சி நிர்வாகம் எத்தனை முறை அந்த தனியார் நிறுவனத்தை ஆய்வு செய்தீர்கள். மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்வதற்கு, நகராட்சி அதிகாரிகள் அவர்களுக்கு கடிதம் அனுப்பி பரிந்துரை செய்தீர்களா என்பது தெரியவில்லை.

ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகே தோண்டிய சாலை சீரமைக்கப்படாமலே குண்டும், குழியாகவே உள்ளதால் விபத்துகள் நடக்கிறது. தற்போது மீண்டும் சாலையை தோண்டி வீணாக்குகின்றனர் என தெரிவித்தனர்.

இதற்கு பதிளித்த நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, 'பாதாள சாக்கடை பிரச்னை தொடர்பாக வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகிறது. அதே போல் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்' என்றார்.

முதல்வர் படத்தை வைக்க அ.தி.மு.க., கவுன்சிலர் சிபாரிசு கூட்டத்தின் போது அ.தி.மு.க., கவுன்சிலர், கல்யாணசுந்தரம் பேசுகையில், 'நகர மன்றம் என்பது மக்களின் மன்றம் ஆகும். இங்கு, தற்போதைய முதல்வரின் படம் மட்டுமே இருக்க வேண்டும். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஸ்டாலின் படங்களும், தற்போதைய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் படத்தையும் வைக்கக் கூடாது. உங்களின் தனிப்பட்ட அலுவலகத்தில் வைத்து கொள்ளுங்கள். மீறி வைத்தால் அடுத்த கூட்டத்தில் நான் முன்னாள் முதல்வர் பழனிசாமி படத்தை வைப்பேன்' என்றார். இதற்கு 36வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மணவாளன் முன்னாள் துணை முதல்வராக இருந்த உதயநிதி படம் அங்கு தான் இருக்கும். முன்னாள் முதல்வர்களின் படங்களும் அங்கு தான் இருக்கும், எடுக்க முடியாது என தெரிவித்ததால், சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us