நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிரந்தர தீர்வு எப்போது? அரசு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிரந்தர தீர்வு எப்போது? அரசு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
UPDATED : ஆக 06, 2026 07:17 PM
ADDED : ஆக 06, 2026 07:02 PM

செஞ்சி: ஒவ்வொரு ஆண்டும் நந்தன் கால்வாயில் மண் சரிவு ஏற்பட்டு தண்ணீர் வருவது தடைபடுகிறது. இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய ஏரியான பனமலை ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர கடந்த, 1972 ம் ஆண்டு நந்தன் கால்வாய் திட்டம் கொண்டு வந்தனர். இதற்காக திருவண்ணாமலை மாவட்டம் கீரனுாரில் துறிஞ்சல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினர்.
அங்கிருந்து 37.880 கி.மீ., தூரத்திற்கு கால்வாய் அமைத்தனர். இதன்மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில், 14 ஏரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில், 22 ஏரிகளும், என மொத்தம் 36 ஏரிகள் நிரம்பும். ஏரிகள் மூலம் 6,597 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற ஏற்பாடு செய்தனர். இந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், சங்கிலி தொடராக மேலும் பல ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும்.
கடந்த, 1976, ல் திட்டம் நிறைவேறி போது முதன் முறையாக பனமலை ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தனர். இதன் பின்னர் பல்வேறு சிக்கலால் பனமலை ஏரிக்கு துறிஞ்சல் ஆற்று தண்ணீர் வராமல் இருந்தது.
கடந்த, 2018 ஆம் ஆண்டு நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர் தன்னார்வலர்களுடன் களம் இறங்கி இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக களப்பணி செய்தனர்.
இதனால் 2019 ஆம் ஆண்டு பனமலை ஏரிக்கு இரண்டாவது முறையாக தண்ணீர் கொண்டு வந்தனர். இதன்பிறகு 2021 ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் இறுதி ஆண்டில் ரூ.34 கோடி நிதி ஒதுக்கினர். இதன் மூலம் கால்வாயின் ஒரு பகுதி சிமெண்ட் கால்வாயாக மாற்றினர். விடுபட்ட 7 கி.மீ., தூரத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டும்.
2024 ஆம் ஆண்டு நவ., 30 ம் தேதி தமிழகத்தை தாக்கிய 'பெஞ்சல்' புயலின் போது வந்த காட்டாற்று வெள்ளத்தில் நந்தன் கால்வாய் சின்னா பின்னமானது.
இதை புனரமைக்க ரூ.74 கோடி தேவை என நீர்வளத்துறையினர் அரசுக்கு பரிந்துரை செய்தனர். அரசு நிதி ஒதுக்காததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
தற்போது நந்தன் கால்வாயில் ஏராளமான இடங்களில் மண் சரிவும் செடி கொடிகள் வளர்ந்தும் தண்ணீர் வரும் வழிகள் அடைபட்டன.
இதையடுத்து நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர், மாதப்பூண்டி ஏரி பாசன நீர் அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து எட்டாவது ஆண்டாக துார்வாரும் பணியை துவக்கி உள்ளனர். கடந்த 4ம் தேதி துார் வாரும் பணியை விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார். தற்போது ஹிட்டாச்சி இயந்திரத்தை கொண்டு தூர்வாரம் பணி நடந்து வருகிறது.
இதனால் இந்த ஆண்டு பனமலை ஏரிக்கு தண்ணீர் வர வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டுக்குள் மீண்டும் மண் சரிவு ஏற்படும், ஜம்புகளும் வளர்ந்துவிடும்.
இதற்கு நிரந்தர தீர்வாக மண் பகுதியாக உள்ள 7 கி.மீ., தூரத்திற்கான கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றவும், நந்தன் கால்வாய்க்கு என தனியாக அதிகாரிகளை நியமிக்கவும், தொடர்ந்து கண்காணிக்கம், பராமரிப்பு பணிகளை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
நிலத்தடி நீர் நந்தன் கால்வாய் தண்ணீரால் ஏரிகள் மட்டும் நிரம்புவதில்லை. கால்வாய் பயணிக்கும் 38 கி.மீ., துாரத்திற்கும் இரண்டு பக்கமும் 5 கி.மீ., அளவிற்கு விவசாய கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் விவசாயிகளுக்கு மட்டுமின்றி பல கிராமங்களில் குடிநீர் கிணறுகள் வற்றாமலும் பாதுகாக்கிறது.
தனிக்கோட்டம் நந்தன் கால்வாய் திட்டத்தை கண்காணித்து பராமரிப்பு பணிகளை செய்ய நான்கு நீர் பாசன உதவியாளர்கள் பணியிடம் உள்ளது.
இதற்கு நியமிக்கப்படும் நபர்கள் வேறு பணிகளை கவனிப்பதால் நந்தன் கால்வாய் பராமரிப்பு இன்றி உள்ளது. எனவே ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த தனிக்கோட்டம் உருவாக்க வேண்டும். அதற்கான தலைமை இடத்தை நந்தன் கால்வாய் உள்ள பகுதியில் அமைக்க வேண்டும்.
