/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எங்கே செல்லும் இந்த பாதை... குழப்பத்தில் பா.ம.க., நிர்வாகிகள்
/
எங்கே செல்லும் இந்த பாதை... குழப்பத்தில் பா.ம.க., நிர்வாகிகள்
எங்கே செல்லும் இந்த பாதை... குழப்பத்தில் பா.ம.க., நிர்வாகிகள்
எங்கே செல்லும் இந்த பாதை... குழப்பத்தில் பா.ம.க., நிர்வாகிகள்
ADDED : ஜூலை 15, 2025 06:12 AM
பா.ம.க., கட்சியை ராமதாஸ் துவக்கி, வரும் ஜூலை 16ம் தேதி 37வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தற்போது, இக் கட்சியில், நிறுவனர் ராமதாசுக்கும் இவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கட்சி யாருக்கு சொந்தம் என்று தேர்தல் கமிஷன் கதவை தட்டும் நிலைமைக்கு சென்றுள்ளது.
தந்தை - மகன் மோதல் காரணமாக, இருவரும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டம், நிர்வாக குழு கூட்டம், மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்தி வருகின்றனர். கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும், ராமதாஸ் தரப்பில் 3 மாவட்ட செயலாளர்கள், அன்புமணி தரப்பில் 3 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரண்டு பிரிவாக மாறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, பா.ம.க.,விற்கு மயிலம் தொகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மட்டும் உள்ளார். இவர் அன்புமணி பக்கம் உள்ளார். இதே போல் மாவட்டத்தில் ஆரம்ப நிலையிலிருந்து இருக்கும் நிர்வாகிகள் பலர், ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இரு தரப்பினர் சார்பில் நடைபெறும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், பொதுக்குழு கூட்டங்களில் இரு பக்கமும் சாயாமல், நடுநிலை வகித்து வரும் பெரும்பாலான பா.ம.க.,வினர், இக்கூட்டங்களில் பங்கேற்காமல் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி புறக்கணித்து வருகின்றனர்.
இதற்கு காரணம், ஒரு தரப்புக்கு ஆதரவு தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்றால் எதிர் தரப்பினரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் நடுநிலை வகித்து விடுவதே நல்லது என நினைக்கின்றனர்.
நடுநிலையின்றி ஒரு பக்கம் சாய்ந்தால், நாளை தந்தை - மகன் இருவரும் இணைந்து விட்டால், இரு தரப்பில் எப்படியும் ஒரு தரப்பினரின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும்.
எதற்கு வம்பு என நடுநிலையாக இருப்பது நல்லது என அமைதி காத்து வருகின்றனர்.