/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி சட்டசபை தொகுதியில் முந்தப்போவது... யார்? அ.தி.மு.க., பா.ம.க., பலப்பரீட்சை
/
செஞ்சி சட்டசபை தொகுதியில் முந்தப்போவது... யார்? அ.தி.மு.க., பா.ம.க., பலப்பரீட்சை
செஞ்சி சட்டசபை தொகுதியில் முந்தப்போவது... யார்? அ.தி.மு.க., பா.ம.க., பலப்பரீட்சை
செஞ்சி சட்டசபை தொகுதியில் முந்தப்போவது... யார்? அ.தி.மு.க., பா.ம.க., பலப்பரீட்சை
ADDED : ஏப் 15, 2024 04:42 AM
சட்டசபை தேர்தலின் போது செஞ்சி தொகுதியில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பா.ம.க., தோல்வியடைந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் தனித்தனியாக போட்டியிடும் இரண்டு கட்சியும் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க கடுமையாக போராடி வருகின்றன.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஆரணி தொகுதியில் 9 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 6 சுயேச்சைகள் என 15 பேர் போட்டியிட்டனர். அப்போது பதிவான 11,43,907 ஓட்டில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் 6,17,760 ஓட்டுகளும், பா.ஜ., - பா.ம.க., கூட்டணியோடு போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் ஏழுமலை 3,86,954 ஓட்டுகளும் பெற்றனர். தி.மு.க., கூட்டணி 2,30,806 ஓட்டுகளை அதிகம் பெற்றது.
அந்த தேர்தலில் பா.ம.க.,வினர் அன்புமணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத்திற்கு ஓட்டு போட்டதால் அ.தி.மு.க., தோல்வி அடைந்ததாக அப்போது அ.தி.மு.க., தரப்பில் குற்றம் சாட்டினர்.
அடுத்து 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் போளூர், ஆரணியில் அ.தி.மு.க.,வும், செஞ்சி, செய்யார், வந்தவாசி (தனி), தொகுதியில் தி.மு.க.,வும், அ.தி.மு.க., கூட்டணியோடு மயிலம் தொகுதியில் பா.ம.க.,வும் வெற்றி பெற்றன.
செஞ்சி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய அமைச்சர் மஸ்தான் 1,09,625 ஓட்டுகளும், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் ராஜேந்திரன் 73,822 ஓட்டுகளும் பெற்றனர். 35,803 ஓட்டுகளை தி.மு.க., கூடுதலாக பெற்றது.
2016 தேர்தலை விட 13 ஆயிரம் ஓட்டுகளை தி.மு.க., இந்த தேர்தலில் அதிகம் பெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., முழு ஒத்துழைப்பு வழங்காததுடன், லோக்சபா தேர்தலில் காங்., கட்சி வெற்றி பெற்றதற்கு பழி தீர்த்து கொண்டது என பா.ம.க., தரப்பில் புகார் எழுப்பினர்.
வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் கஜேந்திரனும், பா.ம.க., சார்பில் கணேஷ்குமாரும் போட்டியிடுகின்றனர். லோக்சபா, சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்ட இரண்டு கட்சியும் இந்த தேர்தலில் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
ஆளும் கட்சியான தி.மு.க.,வில் ஓட்டு சதவீதம் குறைந்தால் பதவிக்கு ஆபத்து என்பதால் அமைச்சர் மஸ்தானும், ஆளும் கட்சி சேர்மன்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளும் தீவிரமாக தேர்தல் வேலை செய்து வருகின்றனர்.
தி.மு.க.,வின் தாராள நடவடிக்கையும், ஆளும் கட்சி பலமும் சட்டசபை தேர்தலை விட கூடுதல் ஓட்டுகளை பெற்று தரும் என தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.
ஊராட்சி, காலனி என வலுவான கிளை அமைப்புடன் இருக்கும் அ.தி.மு.க.,வில், வேட்பாளர் கஜேந்திரன் செஞ்சி தொகுதிக்கு புதியவர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்.
இதனால் செஞ்சி தொகுதி அ.தி.மு.க.,வினர் ஆரம்பம் முதலே தேர்தல் வேலையில் ஆர்வம் காட்டவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கும் நட்சத்திர பேச்சாளர்களோ, கட்சியின் முன்னணி தலைவர்களோ வரவில்லை.
பா.ம.க., வில் போட்டியிடும் கணேஷ்குமார் ஏற்கனவே செஞ்சி தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். மக்களுக்கு பரிச்சயமானவர். இவருக்காக பா.ம.க.,வினர் தீவிர களப்பணி ஆற்றி வருகின்றனர்.
அடுத்து வரும் நாட்கள் மிக முக்கியாமான நாட்கள். பிரசார பலத்தையும் தாண்டி வாக்களர்களுக்கான கவனிப்பு வெற்றியின் போக்கை மாற்றும் தன்மை கொண்டது.
கடும் போட்டியை எதிர்கொண்டுள்ள அ.தி.மு.க.,வும், பா.ம.க.,வும் வெற்றி பெறுவதையும் கடந்து கட்சியின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இரண்டு கட்சிகளின் எதிர்காலத்திற்கும் இந்த தேர்தலில் வாங்கும் ஓட்டுக்கள் முக்கியமானவை. எனவே எந்த கட்சி இந்த போட்டியில் முந்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைத்து கட்சியினரிடமும் ஏற்பட்டுள்ளது.
-நமது நிருபர்-

