/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள்
/
கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள்
கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள்
கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள்
ADDED : பிப் 01, 2026 06:45 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கணவரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த வி.அரியலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜகுமாரன், 35; இவர், விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவின் பாலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கார் டிரைவராக பணிபுரிந்தார். இதே பாலகத்தில், விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த முனியன் மகன் ரஞ்சித், 31; பணிபுரிந்து வருகிறார். இருவரும் நண்பர்கள்.
இதனால், ராஜகுமாரன் வீட்டிற்கு ரஞ்சித் அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது, ராஜகுமாரன் மனைவி லதா, 33; என்பவருக்கும் ரஞ்சித்திற்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
ராஜகுமாரன் அடிக்கடி சவாரிக்கு வெளியூரில் தங்கும் சமயத்தில் ரஞ்சித்தும், லதாவும் தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர். இதையறிந்த ராஜகுமாரன், தனது மனைவி லதாவை கண்டித்துள்ளார்.
இதனால், தங்களின் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த ராஜகுமாரனை கொலை செய்ய லதாவும், ரஞ்சித்தும் திட்டம் தீட்டினர். அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 17 ம் தேதி நள்ளிரவு ராஜகுமாரனை இருவரும் தாக்கி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து லதா, ரஞ்சித் இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது, விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசிம்மவர்மன், குற்றம் சுமத்தப்பட்ட லதா, ரஞ்சித் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சுப்பராயலு ஆஜரானார்.

