ADDED : மே 26, 2025 12:07 AM
அவலுார்பேட்டை :வடுகபூண்டியில் ஆதி திராவிட மக்களின் சுடுகாட்டுக்கு செல்ல மயானப்பாதை அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டை அடுத்த வடுகபூண்டி ஊராட்சியில் 750க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இறந்தவர்களின் உடலை 1 கி.மீ., துாரமுள்ள சுடுகாட்டுக்கு நிலங்களின் வழியாக எடுத்து செல்கின்றனர்.
இதனால், விவசாய நிலங்களின் பயிரிட்டுள்ள பயிர்கள் சேதமாகின்றன. ஒவ்வொரு இறப்பு ஏற்படும்போதும் இது போன்ற அவதிகளை இப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் பாதை வசதி இல்லாத நிலையில் சுடுகாட்டுக்கு செல்வதில் அதிக சிரமம் ஏற்படுகிறது.
எனவே, இப்பகுதியில் மயானப்பாதை மற்றும் கருமகாரிய மேடை வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.