/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூடுவாம்பூண்டியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?... மின் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை
/
கூடுவாம்பூண்டியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?... மின் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை
கூடுவாம்பூண்டியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?... மின் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை
கூடுவாம்பூண்டியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?... மின் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை
ADDED : மே 24, 2024 05:49 AM
செஞ்சி: மேல்மலையனுார் தாலுகா கூடுவாம்பூண்டியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சரி செய்ய கூடுவாம்பூண்டியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்மலையனுார் தாலுகாவில் உள்ள கிராமங்கள், விவசாயம் சார்ந்த பகுதிகளாகும். இதில், பெரும் பகுதி கிணற்று நீர் பாசனம் மூலம் நடக்கிறது. கிணற்று பாசனத்திற்கு மின்சாரம் மிக முக்கியமானது. மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதை எதிர் கொள்ள புதிய துணை மின் நிலையங்களை அமைக்க வேண்டியது அவசியமாகிறது.
தற்போது அவலுார்பேட்டை, தேவனுார், தாயனுார் கிராமங்களில் துணை மின்நிலையங்கள் உள்ளன. இதில் அவலுார்பேட்டை துணை மின் நிலையத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட மின் பகிர்மான பிரிவில் இருந்து மின்சாரம் வருகிறது.
இதே போன்று கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பெருவளூர், மரக்கோணம், கிழவன்பூண்டி, காரணி, வடவெட்டி, சிந்தகம்பூண்டி, ஞானோதயம், சூரப்பன்தாங்கல், மேல்நெமிலி, மோடிபட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 7000க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளுக்கு திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதியில் அடிக்கடி குறைந்தழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் மின் மோட்டார்கள் காயில் தீய்ந்து போவதும், மின் மோட்டார்களை இயக்க முடியாமலும் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இப்பிரச்னைக்குத் தீர்வு காண தற்போது 33 கிலோ வாட் துணை மின் நிலையமாக உள்ள தேவனுார் துணை மின் நிலையத்தை 110 கிலோ வாட் துணை மின் நிலையமாக தரம் உயர்ந்த வேண்டும். அல்லது கூடுவாம்பூண்டியில் 33 கிலோ வாட் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது தேவனுார் துணை மின்நிலையத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. எதிர்காலத்தில் மேலும் பல ஆயிரம் மின் இணைப்புகள் வழங்க வேண்டிய நிலை வரும்.
எனவே, தேவனுாரில் கூடுதல் மின்சுமையை ஏற்படுத்தாமல் கூடுவாம்பூண்டியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன் மின்வாரிய அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். அப்போது கூடுவாம்பூண்டியை அடுத்த பெருவளூர் கூட்ரோட்டில் இடம் தேர்வு செய்தனர்.
அங்கு பூமிக்கு அடியில் பாறைகள் நிறைந்து இருந்தது தெரிய வந்ததால் திட்டத்தை கிடப்பில் போட்டனர்.
தற்போது மின் தேவை அதிகரித்துள்ளதால் கூடுவாம்பூண்டியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. புதிய துணை மின் நிலையம் அமைக்க பாப்பந்தாங்கல் கிராம எல்லையில் 8 ஏக்கர் அளவில் அரசு புறம்போக்கு இடமும் உள்ளது.
எனவே எதிர்கால தேவையை கருத்தில் கொண்டும், தற்போதுள்ள மின் பற்றாக்குறையை சரி செய்யவும் கூடுவாம்பூண்டியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க மின்வாரிய உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.