/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் சிப்காட் தொழிற்பூங்காவில் காகித தொழிற்சாலை அமைக்கப்படுமா
/
திண்டிவனம் சிப்காட் தொழிற்பூங்காவில் காகித தொழிற்சாலை அமைக்கப்படுமா
திண்டிவனம் சிப்காட் தொழிற்பூங்காவில் காகித தொழிற்சாலை அமைக்கப்படுமா
திண்டிவனம் சிப்காட் தொழிற்பூங்காவில் காகித தொழிற்சாலை அமைக்கப்படுமா
ADDED : ஏப் 22, 2025 04:55 AM

விழுப்புரம் மாவட்டத்தில் நெல், கரும்பு, மணிலாவிற்கு அடுத்த படியாக சவுக்கு அதிக அளவில் பயிரிடப்படுகின்றது. மாவட்டத்தில் போதிய மழை இல்லாததாலும், சவுக்கு வறட்சியை தாக்குபிடிக்கும் என்பதால், அதிக விவசாயிகள் சவுக்கு சாகுபடிக்கு மாறி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் வானுார், திண்டிவனம், மரக்காணம், மயிலம், திருவெண்ணைநல்லுார் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு மரத்தின் வேர் முதல் உச்சி வரை பாகங்களை விற்பனை செய்ய முடியும் என்பதால், விளை நிலங்களுக்கு நேரடியாக வரும் வியாபாரிகள், மொத்தமாக விலை பேசி, சவுக்கு மரத்தை வெட்டி, கம்பம், வேர் கட்டைகள், சவுக்கு மிளார்கள் என தனித்தனியாக பிரித்து கோயம்புத்துார், ஈரோடு, பவானி, திருச்சி உள்ளிட்ட தனியார் காகித தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
தற்போது, சவுக்கு மரம் டன் ஒன்றுக்கு அதிக பட்சமாக 8,500 ரூபாய் வரை விற்கப்படுகின்றது.விழுப்புரம் மாவட்டத்தில் விளையும் சவுக்கு மரங்கள் ஈரோடு பள்ளிப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனம் (டி.என்.பி.எல்.,) மற்றும் தனியார் வியாபாரிகள் மூலம் வாங்கப்படுகின்றது.
சவுக்கு பயிரிடும் விவசாயிகளுக்காக, வானுார் தாலுகா, காட்ராம்பாக்கத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித தொழிற்சாலை நிறுவனம் சார்பில், கடந்த 2020ம் ஆண்டு 10 ஏக்கரில், சவுக்கு நர்சரி (நாற்றங்கால் பண்ணை) அமைக்கப்பட்டது. 13 ஏக்கர் பரப்பளவில் ஆண்டு தோறும் ஒரு கோடி சவுக்கை கன்றுகள் தயார் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், அதிக அளவில் சவுக்கு சாகுபடி செய்யப்படுவதால், அரசு சார்பில் காகித தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
விவசாயிகள் கோரிக்கையை, மயிலம் தொகுதி சிவக்குமார் எம்.எல்.ஏ., சட்டசபையில் எழுப்பினர். மயிலம் தொகுதியில் காகித தொழிற்சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது போல், சவுக்கு மரங்களுக்கு நியாயமான விலை கிடக்க, சவுக்கு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் எனவும், திண்டிவனம் அருகே வெண்மணியாத்துார் சிப்காட் தொழிற்சாலை பகுதியில் காகித தொழிற்சாலைக்கு தேவையான சவுக்கு மரங்கள் மூலம் தயாரிக்கும் காகித கூழ் தயாரிப்பு தொழிற்சாலை துவங்க தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.