/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜானகிபுரத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?: 10 கிராம மக்கள் கோரிக்கை நிறைவேறுமா?
/
ஜானகிபுரத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?: 10 கிராம மக்கள் கோரிக்கை நிறைவேறுமா?
ஜானகிபுரத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?: 10 கிராம மக்கள் கோரிக்கை நிறைவேறுமா?
ஜானகிபுரத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?: 10 கிராம மக்கள் கோரிக்கை நிறைவேறுமா?
ADDED : மார் 24, 2025 04:35 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மூடப்பட்ட ரயில்வேகேட் பகுதியில், சுரங்கப் பாதையை எதிர்பார்த்து 10 கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த கண்டமானடி ஊராட்சி ஜானகிபுரத்தில், சென்னை - திருச்சி மார்க்க ரயில் பாதையில் இருந்த ரயில்வே கேட் கடந்தாண்டு மார்ச் 23ம் தேதி மூடப்பட்டது. இந்த ரயில்வே கேட் வழியாகவே, விழுப்புரத்திலிருந்து ஜானகிபுரம் வழியாக கண்டமானடி, கொளத்துார், அரியலுார், காவணிப்பாக்கம், சித்தாத்துார், குச்சிப்பாளையம், வேளியம்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் சென்று வந்தனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இந்த ரயில்வே கேட்டை, எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென ரயில்வே நிர்வாகத்தினர் கடந்தாண்டு நிரந்தரமாக மூடி வழியை அடைத்தனர்.
இதனால், பாதிக்கப்பட்ட கண்டமானடி, ஜானகிபுரம், கண்டம்பாக்கம், மரகதபுரம், கொளத்தூர் உள்ளிட்ட கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியல், அனைத்து கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர்.
விழுப்புரத்திலிருந்து ரயிலின் வேகம் அதிகரித்துள்ளதால், அருகாமை ரயில்வே கேட்கள் மூடப்பட்டு வருவதாகவும், அதற்கு மாற்றாக புதிதாக நான்கு வழிச்சாலைக்கு அமைத்துள்ள ரவுண்டானா மேம்பாலத்தை பயன்படுத்துமாறும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால், கண்டமானடி, கொளத்துார், அரியலுார் உள்ளிட்ட 6 கிராமத்தினர் ஒரு புறமும், எதிர்புறத்தில் ஜானகிபுரம், மரகதபுரம், திருப்பச்சாவடிமேடு, கண்டம்பாக்கம் உள்ளிட்ட கிராமத்தினர் வழியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டமானடியில் அரசு மருத்துவமனை, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, கால்நடை மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி, தபால் நிலையம், பொது நுாலகம், தொடக்கப் பள்ளி, மின்வாரிய அலுவலகம் போன்றவை இருப்பதால் ஜானகிபுரம் உள்ளிட்ட 6 கிராம மக்கள் ரயில்வே கேட் வழியாக செல்ல முடியாமல், நான்கு வழிச்சாலை மேம்பாலம் வழியாக 4 கி.மீ., சுற்றி வர வேண்டும்.
மேலும், தினசரி 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தை ஆபத்தாக கடந்து செல்வதால் விபத்துகள் நடந்து வருகிறது. மேலும், பல மாணவர்கள், பொதுமக்கள் வழக்கமாக ரயில் பாதையை ஆபத்தாக கடந்து செல்வதும் தொடர்கிறது.
இதனால், ரயில்வே கேட் இருந்த பகுதியில், ரயில்வே சுரங்கப் பாதை அமைத்து தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். நகாய், ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில், ஆர்.டி.ஓ., தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தியதில், ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தரப்படும் என உறுதியளித்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம்-விருதாசலம் இடையே ரயில்வே கேட் மூடப்பட்ட இடங்களில், படிப்படியாக சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. ஜானகிபுரத்திலும் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் திட்ட அனுமதி, நிதி கிடைத்ததும் சுரங்கப்பாதை அமைக்கப்படும்' என்றனர்.